/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/adv-malar-std.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் மாரி செல்வராஜ் தற்போது வாழை என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ‘தென் கிழக்கு..’ என்ற முதல் பாடல் வெளியீட்டு விழா நேற்று(18.7.2024) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக இயக்குநர்கள் ராம், பா.ரஞ்சித், பி.எஸ்.வினோத் ராஜ் உள்ளிட்டவர்களுடன் படக்குழுவினர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய மாரி செல்வராஜ், “என்னுடைய கலையை என் அரசியலை மக்கள் கொண்ட சென்ற விதம் எனக்குத் தெரியும். அவர்களின் நம்பிக்கைதான், எனக்கு தொடர்ந்து படங்கள் எடுக்க நம்பிக்கை அளித்தது. நான் சினிமாவுக்கு வந்ததும் முதன்முதலில் எழுதிய கதை 'வாழை'தான். இந்தக் கதையை எடுத்தால்தான் அடுத்த படத்திற்குப் போக முடியும் என நம்பினேன். இது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தின கதை. ‘மாமன்னன்’ படம் வெளியாவதற்கு முன்னரே இப்படத்தை எடுத்துவிட்டேன்.
நான் கிரியேட் செய்கிற எல்லா கதாபாத்திரமும் என் வாழ்க்கையில் பார்த்த மனிதர்களாக உள்ளனர். அவர்கள் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நான் பேசுவதில் எந்தளவு உண்மையுள்ளது, பொய் உள்ளது எனக் கண்காணித்து வருகின்றனர்.அதனால் எனக்குப் பதற்றமாகவுள்ளது. அது மட்டுமில்லாமல் எனக்கு ஒரு கடமை உள்ளது. நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்க, இப்படத்தில் நடித்த சிறுவர்கள் ராகுல், பொன்வேல் ஆகியோர் இந்த மேடையில் இருப்பதுதான் காரணம். இருவரும் என் சொந்த அக்கா மற்றும் மாமன் மகன்கள். அந்த வயதில் நான் என்னவாக இருந்தேன் என்று எனக்குத் தெரியும்.
இனிமேல் இந்தகலையின் வழியாக இந்த உலகத்தை அவர்கள் புரிந்து கொள்வார்கள். என் ஊருக்குள் கலை நுழையப்போகிறது என்று சந்தோஷமாக உள்ளது, இனிமேல் பசங்களுக்குப் பொறுப்பு வரும். அந்த வயதில் நான் மூர்க்கமாக இருந்தேன். என் மண்டையில் தோன்றும் விஷயத்திற்கு நான் என்ன பண்ணுவது என்று பைத்தியம் பிடித்த வயதில் அவர்கள் இங்கு உள்ளனர். நான் முட்டி, மோதி அவர்களை உருவாக்குவதற்கான மேடையை கிரியேட் பண்ணிவிட்டேன் என்பதில் மகிழ்ச்சி. அப்படி என்னை உருவாக்கின இயக்குநர் ராம் சாருக்கு என்னுடைய நன்றி” என்றார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)