விக்ரம்மகனான துருவ் விக்ரம், ‘ஆதித்ய வர்மா’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான நிலையில், விக்ரமுடன் இணைந்து ‘மகான்’ படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமானார். 2021 ஆம் ஆண்டு இந்த அறிவிப்பு வெளியான நிலையில், மாரி செல்வராஜ் மாமன்னன், வாழை என அடுத்தடுத்த படங்களில் பணியாற்றியதால் படப்பிடிப்பு தாமதமானது. மாமன்னன் வெளியானதைத் தொடர்ந்து வாழை பட பணிகளும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் கதை, அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. இதையடுத்து அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘பைசன்’ படத்தை தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. படத்தில் லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார்.
இந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.