/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/106_15.jpg)
'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' பட வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வரும் மாரி செல்வராஜ்தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாரி செல்வராஜின் மூன்றாவது படமான இப்படம் அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். 'வாழை' எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் போஸ்டரைப் பார்க்கையில் கிராமத்துப் பின்னணியில் நான்கு சிறுவர்களின் கதையை மையப்படுத்தி உருவாகிறது போல் தெரிகிறது. மேலும், தலைப்பைப் போலவே வாழைமரத்தோப்புக்குள் அந்த நான்கு சிறுவர்கள்அமர்ந்திருந்து பேசுவது போல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இருக்கிறது.
இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நான்கு சிறுவர்கள் நடிக்க, கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்று தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டுபடத்தின் படப்பிடிப்பை க்ளாப் அடித்து துவக்கி வைத்தார். இப்படத்திற்கு தனுஷ், தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு ரசிகர்களும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)