Advertisment

“நினைச்சு பார்க்காத வலியை ஏற்படுத்தியிருக்கு” - மாரி செல்வராஜ்

mari selvaraj about vikram sugumaran

Advertisment

2013ஆம் ஆண்டு கதிர் நடிப்பில் வெளியான ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். அந்த படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இப்படத்திற்கு முன்பு பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். பின்பு தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தில் வெற்றிமாறனோடு இணைந்து கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியிருந்தார். இதனிடையே நடிகராகவும் சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த படங்கள் பொல்லாதவன், கொடிவீரன் ஆகியவை ஆகும். இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாந்தனுவை வைத்து ‘இராவண கோட்டம்’ படத்தை இயக்கினார். இப்படம் 2023ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இதையடுத்து சூரியை வைத்து ஒரு படம் எடுக்க பேச்சு வார்த்தை நடந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், விக்ரம் சுகுமாரன், காலமாகியுள்ளார். மாரடைப்பு காரணமாக அவர் மறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மதுரையில் நேற்று ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு இரவு பஸ் ஏறும்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இவரது மறைவு, தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம் சுகுமாரன் உடல் சென்னையில் அவர் வாழ்ந்த இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு திரை பிரபலங்கள் வெற்றிமாறன், மாரி செல்வராஜ், சாந்தணு, கலையரசன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். இதில் மாரி செல்வராஜ் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்து விக்ரம் சுகுமாறனுடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் பகிர்ந்துகொண்டவை, “பாலுமகேந்திரா சாரிடம் அவர் ஒர்க் பண்ணும்போதே எனக்கு பழக்கம். ஒரு தம்பியா நினைச்சு, நிறைய முறை என்னிடம் பேசியிருக்கார். ஒரு நல்ல சினிமாவை பார்த்தால், அதன் கிராப்ஃட்டை, ஆழமாவும் அழுத்தமாவும் விவாதிப்பார். அவருடைய மரணம் நினைச்சு பார்க்காத வலியை ஏற்படுத்தியிருக்கு. ஏன்னா, அவர் நிறைய நல்ல சினிமாக்களை எடுக்கணும்னு பிளான் வச்சிருந்தார். நிச்சயமா அவரது படைப்பின் வழியா ரொம்ப நாள் எல்லாருடைய மனசில் நிலைச்சு நிற்பார் என நம்புறேன்” என்றார்.

mari selvaraj vikram sugumaran
இதையும் படியுங்கள்
Subscribe