/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/39_56.jpg)
திருநெல்வேலி அருகே உள்ள நாங்குநேரி ஊரில் வசித்து வருபவர்கள் கூலி தொழிலாளி முனியாண்டி மற்றும் அம்பிகாபதி. இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களது வீட்டில் இரவு 10.30 மணியளவில் 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பைக் கிளப்ப போலீஸார் விசாரணையில், சின்னத்துரை படிக்கும் பள்ளியில் சில சீனியர் மாணவர்கள் அவரைத் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இது குறித்து பெற்றோரிடமும் தலைமையாசிரியரிடமும் சின்னத்துரை கூறியுள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள், வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதைக் கண்டித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்துப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், தனது ட்விட்டர் பக்கத்தில், "தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து இயக்குநர் மாரி செல்வராஜ், "கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போக சொல்லி, உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்" எனத்தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)