தூத்துக்குடி மாவட்டத்தின் ஆறுமுகமங்கலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் சந்திரசேகர் - தமிழ்ச்செல்வி தம்பதியினரின் மகனான கவின் (எ) செல்வகணேஷ். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற அவர், தன்னுடைய தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை பாளையங்கோட்டை கே.டி.சி நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனை வாசலில் காத்திருந்த போது, அங்கு வந்த ஒரு இளைஞர் கவினை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் என்பவர், கவினை நான் தான் கொலை செய்தேன் என பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஆஜரானார். அவர் கொடுத்த வாக்கு மூலத்தில், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கவினும் சுர்ஜித்தின் அக்காவும் பள்ளி பருவத்தில் இருந்தே பழகி வந்துள்ளனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகம். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கவின், தனது சகோதரியிடம் பேசுவது சுர்ஜித்துக்கு பிடிக்கவில்லை. அதனால் கவினை வெட்டி படுகொலை செய்துள்ளார். இவர் இப்போது நெல்லை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவத்தில் சுர்ஜித்தின் பெற்றோரும் உடந்தையாக இருப்பதாக, அதாவது, அவர்களின் தூண்டுதலின் பேரில் தான் சுர்ஜித் கொலை செய்ததாக கவினின் உறவினர்கள் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனடிப்படையில் சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணவேணி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் மணிமுத்தாறு ஆயுதப்படையின் தமிழ்நாடு சிறப்பு காவல் பட்டாலியனில் எஸ்.ஐ.யாகப் பணிபுரிந்து வந்தவர்கள். வழக்கு தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில், அவர்களை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த ஆணவக் கொலை சம்பந்தமாக பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் இந்த சம்பவம் தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்…
சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆகவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.