mari selvaraj about maamannan in pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த 8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் இன்று மாமன்னன்திரைப்படம் திரையிடப்பட்டது. பின்பு படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

Advertisment

அப்போது, மாமன்னன் படம் குறித்து நிறைய விஷயங்களைபகிர்ந்து கொண்டார் மாரி செல்வராஜ். அதன் ஒரு பகுதியில், “மாமன்னன் படம் ஒரு சாதாரண சம்பவம். எங்க அப்பா ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் சேரில் உட்காந்திருக்கேன். அவர் உட்காரவில்லை. அன்னைக்கு எங்க அப்பா உட்பட யாருமே ஃபீல் பண்ணவில்லை. ஆனால் எனக்கு அவர் உட்காரவில்லை என தோன்றியது. ஏன் என கேட்டபோது நாங்க உட்காரமாட்டோம் என்றார். சின்ன வயதில் நானே நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு பார்க்கும் போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அது ஒரு கதையாக மாறுகிறது. இன்றைக்கு பரியேறும் பெருமாள் பண்ணிட்டு போனபோது கூட, எங்க அப்பா அப்படித்தான் நின்னுகிட்டு இருந்தார்.

Advertisment

என்னுடைய படைப்பு 10 வருடம் கழித்து கேள்விக்கு உட்படுத்தப்படலாம். எனக்கு இன்றைக்கு உள்ள வலி, அதை வெளியேற்றவேண்டும் அவ்வளவுதான். ஒரு படைப்பாளியாக ஒரு சுமையை இறக்குகிறேன். எனக்கு விடுபடுவதற்கான வழி தான் இந்த சினிமா. என்னுடைய படைப்பு எதுவாக மாறும் என்பது தெரியாது. எனக்குள் இருக்கும் கோவத்தை மட்டும் கலையாக மாற்றுவதற்கு நான் விரும்பவில்லை. என் வாழ்க்கையை கலையாக மாற்றுவது ரொம்ப ஈஸி. என் வாழ்க்கையில் ஒரு அறம் இருக்கிறது என நம்புவது, அந்த அறத்தை படம் பிடித்துக் காட்டுவது, அதன் மூலம் மனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்துவது. இதைத்தான் என்னால் பண்ண முடியும். அது ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? இல்லையா? என்பது பற்றி எனக்கு கவலை கிடையாது.

நமக்கு முன்னாடி ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையைத்தான் படம் எடுத்துட்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு 10 பேர் முக்கிய ஆளுமைகளாக பேசிக்கொண்டு வருகிறோம். தனக்கு நடந்ததை எல்லாம் சொல்ல முடியாமல் நசுங்கி இறந்து போனவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள். அவர்கள் வாழ்கையும் கதைதான். 10 பேரோட வெற்றிக்கதையை சொல்வது மட்டும் என்னுடைய வேலை கிடையாது. நசுங்கி, பிசுங்கி காணாமல் போனவர்களின் கதையைத்தோண்டி எடுத்து, அவர்கள் யாரால் நசுக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. ஏன் நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என சொல்லிக்கொண்டே இருக்கீங்க என கேட்பார்கள். வேறு வழி இல்லை. என்னுடைய கதையைச் சொல்லும் போது அப்படித்தான் சொல்ல முடியும். நான் இன்னொருத்தன் கதையை கடன் வாங்கி சொல்ல முடியாது. அந்தக் கதைக்குள் ஒரு முரண்பாடு இருந்தது என்றால், அதற்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. மறுபடி மறுபடி எனக்கு அப்படிப்பட்ட வாழ்க்கைதான் கொடுக்கப்பட்டது. அந்தக் கேள்விகளை நான் கேட்டுக்கொண்டுதான் இருப்பேன்” என ஆதங்கம் நிறைந்து பேசினார்.

Advertisment