அதர்வா நடிப்பில் ‘ஒரு நாள் கூத்து’, ‘ஃபர்ஹானா’ படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டி என் ஏ’. இதில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்திருக்க, பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் ஹரிஹரன் , சத்ய பிரகாஷ் , அனல் ஆகாஷ் , பிரவீன் சைவி , சாஹி சி என ஐந்து பேர் இசையமைத்துள்ளனர்.
இப்படம் வருகின்ற 20 தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் மாரி செல்வராஜும் கலந்து கொண்டார். நிகழ்வில் அவர் பேசுகையில் படக்குழுவினர் குறித்து நிறைய விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். அந்த வகையில் நாயகன் அதர்வா குறித்து பேசுகையில் பரியேறும் பெருமாள் கதை கேட்ட முதல் ஹீரோ அவர்தான் எனக் கூறினார்.
மாரி செல்வராஜ் பேசியதாவது, “அதர்வா பிரதருக்கு நான் ஒன்னு சொல்லனும். அவருக்கு நியாபகம் இருக்கான்னு தெரியல. பரியேறும் பெருமாள் கதை சொன்ன முதல் ஹீரோ அவர்தான். நான் முரளி சாரோட பயங்கரமான ரசிகன். ஒரு தலை காதலுக்கு ஒரு கெத்தை உருவாக்கி கொடுத்தது அவர்தான். அவருடைய பையன் ஹீரோவா வருகிறார் என்றதும் அப்போது நான் எழுதி முடித்த பரியேறும் பெருமாள் பட கதையில் அவரை வைத்து நினைத்து பார்த்தேன்.
முரளி சார் பையன் என்பதால் நம்மளமாதிரி கருப்பா இருப்பார், கதைக்கு பொருத்தமா இருப்பார் என அவரை மீட் பண்ணி கதை சொன்னேன். ஆனால் அவர் அப்போது பிஸியாக இருந்ததால் படம் பண்ன முடியாமல் போனது. அதற்கு நான் ரொம்ப ஃபீல் பண்ணேன். முரளி சார் பையனே நம்ம படத்தை ஒத்துக்கலை, வேறு யார் ஒத்துக்க் போறான்னு ரொம்ப அப்செட்டில் இருந்தேன். அதை என்னைக்காவது ஒரு நாள் அதர்வா முன்னாடி சொல்லனும்னு நினைச்சேன். அது கிட்டத்தட்ட 7 வருஷத்துக்கு அப்புறம் இன்னைக்கு நடந்திருக்கு” என்றார்.