71வது தேசிய விருது வழங்கும் விழா கடந்த 23ஆம் தேதி வழக்கம் போல் டெல்லியில் உள்ள குடியரசு மாளிகையில் நடைபெற்றது. இதில் 2023ஆம் ஆண்டிற்கான விருது வழங்கப்பட்டிருந்தது. கரோனா காரணமாக 2019 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தள்ளி இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது நினைவுகூரத்தக்கது. நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கி கௌரவித்தார். தமிழ் சினிமாவில் இருந்து எம்.எஸ்.பாஸ்கர், ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், தயாரிப்பாளர் சினிஷ் ஆகியோர் விருது பெற்றனர். நிகழ்வில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மோகன்லால் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது மொத்தம் 5 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. ‘நாள் 2’ என்ற மராத்தி படத்திற்காக த்ரீஷா தோசர், பார்கவ் ஜக்தாப், ஸ்ரீனிவாஸ் போகலே ஆகியோருக்கும் ‘ஜிப்ஸி’ என்ற மராத்தி படத்திற்காக கபீர் கந்தாரேவுக்கும் ‘காந்தி தாத்தா சேட்டு’ என்ற தெலுங்கு படத்திற்காக சுக்ரிதி வேணி பந்த்ரெட்டிக்கும் வழங்கப்பட்டது. இதில் ‘நாள் 2’ படத்திற்காக விருது வாங்கிய த்ரீஷா தோசர் பலரது கவனத்தை தற்போது பெற்றார். அதற்கு காரணம் அவரது வயது, விழாவில் அவர் வந்த விதம். ஐந்தே வயதான இவர், புடவை கட்டி வெள்ளந்தியான சிரித்த முகத்தோடு குடியரசு தலைவரிடம் விருது வாங்கியது அரங்கை கைதட்டல்களால் நிரம்பச் செய்தது. அனைவரும் ஆச்சரியமாக பார்த்து கைதட்டி பாராட்டினர். இதனால் பலரது கவனம் இவர் மீது திரும்ப, தற்போது அவரைப் பற்றிய தேடல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
த்ரீஷா தோசர், மராத்தி மொழி படங்களில் கவனம் செலுத்தி வருபவர். அங்கு ‘ஐ துல்ஜா பவானி’ என்ற சீரியலில் தோன்றியிருக்கிறார். பின்பு கடந்த 19ஆம் தேதி வெளியான ‘ஆட்லி பாட்மி ஃபுட்லி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்போது மகேஷ் மஞ்சுரேக்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘புன்ஹா சிவாஜி ராஜே போசலே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இவரது முதல் படம் அவர் விருது வாங்கிய ‘நாள் 2’ படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த வயதிலே தேசிய விருது வாங்கிய குழந்தையாக தற்போது இவர் மாறியுள்ளார்.
‘நாள் 2’ படத்தை சுதாகர் ரெட்டி என்பவர் இயக்கியுள்ளார். இதில் பிரபல மராத்தி இயக்குநர் நாக்ரஜ் மஞ்சுலேவும் நடித்துள்ளார். அதுபோக அவரே தயாரித்தும் உள்ளார். இப்படத்தில் சிமி என்ற கதாபாத்திரத்தில் த்ரீஷா தோசர் நடித்திருந்தார். இதில் நடிக்கும் போது அவருக்கு 3 வயதுதான் என சொல்லப்படுகிறது. இப்படம் ஒரு கிராமத்தில் குழந்தைகளின் வாழ்க்கை மற்றும் உடன் பிறந்தவர்களுடனான உறவை மைய்யப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாகமான ‘நாள்’ படம் 66வது தேசிய விருது விழாவில் சிறந்த முதல் படத்திற்கான இயக்குநர் விருதை வென்றிருந்தது.
இந்த நிலையில் த்ரீஷா தோசருக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உங்களுக்கு எனது மிகப்பெரிய பாராட்டுக்கள். நான் என் முதல் தேசிய விருது வாங்கும் போது எனக்கு வயது 6. அதனால் என்னுடைய சாதனையை நீங்கள் முறியடித்து விட்டீர்கள். இன்னும் நிறைய தூரம் போகவேண்டியிருக்கிறது மேடம். உங்களது அற்புதமான திறமையைக் கொண்டு தொடர்ந்து வேலை செய்யுஙள். உங்கள் வீட்டில் இருக்கும் பெரியோர்களுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று பாராட்டியுள்ளார். கமல்ஹாசன் தனது முதல் படமான ‘களத்தூர் கண்ணம்மா’ படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.