வெற்றிமாறன் தயாரிப்பில் அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மனுசி’. இளையராஜா இசையமைத்துள்ள இப்படம், முழுவதுமாக தயாராகி பல மாதங்கள் ஆகிறதென கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில் அதில் காவல் துறையின் அடக்குமுறைக்கு பாலாஜி சக்திவேலும், ஆன்ரியாவும் எவ்வாறு ஆளாகிறார்கள் என்பது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தது. மேலும் பல்வேறு புரட்சிகர வசனங்களும் இடம்பெற்றிருந்தது. இது பலரது வரவேற்பை பெற்று படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

Advertisment

இப்படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் இப்படம் மாநில அரசை மோசமாக சித்தரித்துள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்தனர். இதை எதிர்த்து வெற்றிமாறன் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், சென்சார் போர்டு கூறிய ஆட்சேபனைகளை எதிர்த்து வெற்றிமாறன் வழக்கு தொடரலாம் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தது. 

இதனிடையே சென்சார் போர்டுக்கு எதிராக வெற்றிமாறன் இன்னொரு வழக்கை தொடர்ந்திருந்தார். 
அதாவது, படத்தில் 37 ஆட்சேபகரமான காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, அதனை நீக்க சென்சார் போர்டு அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வெற்றிமாறன் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது சென்சார் போர்டு சுட்டிக்காட்டிய ஆட்சேபத்துக்குரிய காட்சிகள், வசனங்கள் சரியானவையா என ஆய்வு செய்ய படத்தை பார்க்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். அதன்படி கடந்த 24ஆம் தேதி நீதிபதி படம் பார்த்ததுள்ளார். 

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், படத்தில் சில காட்சிகளை மற்றும் வசனங்களை நீக்கவும் சில காட்சிகளை மாற்றி அமைத்து இரண்டு வாரத்திற்குள் மீண்டும் சென்சார் போர்டில் விண்ணப்பிக்ககுமாறும் வெற்றிமாறனுக்கு உத்தரவிட்டார். மேலும் விண்ணப்பித்த இரண்டு வாரங்களில் சான்றிதழ் வழங்க வேண்டுமென சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டார்.