mansoor alikhan trisha issue case

மன்சூர் அலிகான், சில மாதங்களுக்கு முன்பு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையானது. அவர், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் பல்வேறு பிரபலங்கள், தமிழ் திரையுலகை சார்ந்த சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்பு இது குறித்து விளக்கமளித்த மன்சூர் அலிகான், நான் பேசியதை திட்டமிட்டே வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புவதாக கூறி மன்னிப்பு கேட்கமுடியாது என தெரிவித்திருந்தார். இதையடுத்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்தது. அதன்படி மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக மன்சூர் அலிகானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இதனிடையே முன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டார். த்ரிஷாவும் மன்னித்துவிட்டதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். பின்பு இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்பியது சென்னை காவல்துறை. பின்பு த்ரிஷாவிடம் விளக்கம் கேட்டிருந்தனர். மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுவிட்டதால், மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என த்ரிஷா பதில் கடிதம் எழுதியிருந்தார். இதனிடையே த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். அவர்கள் மூவரும் தலா ரூ.1 கோடி தர உத்தரவிடக்கோரி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இந்த வழக்கு நீதிபதி சதிஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் பதிலளிக்க ஆணை பிறப்பித்து ஒத்தி வைத்தார். அடுத்த விசாரணையின் போது, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கில் மனு தொடரப்பட்டுள்ளதாக கூறி மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும் அபராதத் தொகையை 2 வாரங்களில் சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு செலுத்த உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 10ஆம் தேதி நடந்த விசாரணையில் மன்சூர் அலி கான் தரப்பில், அபராதத் தொகையை செலுத்த பத்து நாட்கள் அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்தது. அவரது கோரிக்கை ஏற்று 10 நாட்கள் அவகாசம் வழங்கி விசாரணை ஒத்திவைக்கபட்டது.

இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் மன்சூர் அலி கான். இந்த வழக்கானது இன்று விசாரணைக்குவந்த நிலையில், அபராதத் தொகையை செலுத்துவதாக தனி நீதிபதியின் உத்தரவை ஏற்றுக்கொண்டு, கால அவகாசமும் பெற்றுக் கொண்டு இப்போது எப்படி மேல்முறையீடு செய்ய முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். மேலும் தனி நீதிபதியின் தனி உத்தரவிற்கும் தடை விதிக்க மறுத்துவிட்டார்கள். இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி தனி நீதிபதி முன் நீங்கள் வலியுறுத்தலாம் எனக் கூறி வழக்கு விசாரணையை பிப்ரவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.