mansoor ali khan statement regards his party issue

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisment

இத்தகைய சூழலில் மன்சூர் அலிகான் அ.தி.மு.க.வுடன் மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து தனது கட்சியான இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் நிர்வாகிகளுடன் இணைந்து கடந்த 13ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இதையடுத்து 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று (15.03.2024) சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணதாசன் வெளியிட்ட அறிக்கையில், “நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயகப் புலிகள் சார்பில் கூட்டணி குறித்தான முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர் கா.கண்ணதாசனுக்கு அளிக்கப்படுகிறது. பொதுச்செயலாளர் தலைமையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி தேர்தல் பரப்புரை குழுவானது கட்சியின் பொதுச்செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கண்ணதாசன் பொதுச்செயலாளர் இல்லை எனக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார் மன்சூர் அலி கான். அந்த அறிக்கையில், “இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற இயக்கத்திற்கு பொதுச் செயலாளர் ஆக குன்றத்தூரைச் சேர்ந்த பாலமுருகன் தான் உள்ளார். சகோதரர் கண்ணதாசன் என்ற நபர்மூத்த சங்க உறுப்பினர் செல்லபாண்டியனால் ஆபிஸ் பாயாக வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்தவர்களை படம்பிடித்து கட்சியில் சேர்ந்ததாக காட்டியும், அவ்வப்போது உடன் வருகிறேன், அண்ணா என்று வந்தும் பயன் பெற்றார். தமிழ்நாடு தமிழருக்கே என்று சட்டை அணிந்து வந்ததை கண்டித்தேன். மேலும் இலங்கைக்கு யாரையோ அனுப்ப வேண்டும் என ஒரு லட்சம் ரூபாய் கேட்டார்.

Advertisment

சமீபத்தில் அலுவலக ரப்பர் ஸ்டாம்ப், ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளார். அவர் சேர்த்த உறுப்பினர்களை விடுவித்து புதிய உறுப்பினர்களைக் கொண்டு, மீள் மனு செய்து தேர்தல் ஆணயத்திடம் ஒப்புதல் வாங்கி, விட்டோம். அவர் குறித்து யாரும் கவலை தெரிவிக்க வேண்டாம். தமிழனை வேலைக்கு இதனால் தான் யாரும் வைப்பதில்லை. நான் ஆரணி, பெரம்பலூர் பகுதியில், ஆதரவு திரட்டி வருவதால்... மிகுந்த வேலையாக உள்ளேன். உறுப்பினர்கள் யாரும். அவர் மீது கோபம் கொள்ள வேண்டாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.