அப்-பீட் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில், தர்ஷன் நாயகனாக நடித்துள்ள படம் ‘சரண்டர்’. பாடினி குமார் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் மன்சூர் அலிகான், லால், சுஜித் ஷங்கர், முனிஷ் காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காவல்துறை பின்னணியில், ஆக்சன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு விகாஸ் படிஸா இசையமைத்துள்ளார்.  

இப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, நடைபெற்றது. இந்நிகழ்வினில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது, “தயாரிப்பாளர் அமெரிக்காவிலிருந்து வந்து இப்படத்தை எடுத்துள்ளார். தயாரிப்பாளர் குமாருக்கு வாழ்த்துகள். இயக்குனர் கௌதம், ஈரம் அன்பழகனிடமிருந்து வந்து இப்படத்தை எடுத்துள்ளார். மிக அற்புதமாக இப்படத்தை எடுத்துள்ளார். செட் எல்லாம் அப்படியே ஒரிஜினலாக இருந்தது. 

தர்ஷன் அருமையாக நடித்துள்ளார். இந்த மாதிரி புதியவர்களை ஊக்குவிக்கும் தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துகள். சினிமாவில் தொடர்ந்து ஒரே மாதிரி படங்கள் மட்டுமே வருகிறது, அது மக்களுக்கு போரடிக்கிறது. அவர்களுக்கு வித்தியாசமான படங்களைக் கலைஞர்கள் தர வேண்டும். அதே மாதிரியான படமாக சரண்டர் சரியான நேரத்திற்கு வருகிறது” என்றார்.