விஜயகாந்த் நடிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளியான படம் ‘கேப்டன் பிரபாகரன்’. இப்ராஹிம் ராவுத்தர் தயாரித்த இப்படத்தில் ரூபிணி, மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரம்யா கிருஷ்ணன், சரத்குமார் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையில் ‘பாசமுள்ள பாண்டியரே’, ‘ஆட்டமா தேரோட்டமா’ என இரண்டு பாடல்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தது.
விஜயகாந்தின் 100வது படமாக வெளியாகியிருந்த இப்படம் பெரும் வெற்றி பெற்றது. மேலும் விஜயகாந்துக்கு கேப்டன் என்ற பட்டத்தை அடைமொழியாக பெற்றுத்தந்தது. இந்த நிலையில் இப்படம் 34 ஆண்டுகள் கழித்து நவீனத் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப 4கே தரத்தில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இன்று ரீ ரிலிஸ் செய்யப்பட்டிருக்கிறது. விஜயகாந்தின் பிறந்தநாள் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி என்பதால் அதனை கொண்டாடும் வகையில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ரீ ரிலீஸை விஜயகாந்த் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களுடன் விஜயகாந்த் குடும்பத்தினரும் படக்குழுவினரும் படத்தை கண்டு ரசித்தனர்.
கடலூரில் நெய்வேலியில் உள்ள ஒரு திரையரங்கில் பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் உள்ளிட்ட விஜயகாந்த் குடும்பத்தினர் மற்றும் தேமுதிக முன்னணி நிர்வாகிகள் பார்த்து ரசித்தனர். அப்போது விஜயகாந்தை பெரிய திரையில் பார்த்ததும் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் தேம்பி தேம்பி அழுதனர்.
இதனிடையே சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் பட இயக்குநர் செல்வமணி, வசனகர்த்தா லியாகத் அலிகான், நடிகர் மன்சூர் அலிகான், விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலரும் ரசிகர்களுடன் படத்தை கண்டு களித்தனர். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது மன்சூர் அலிகான் பேசுகையில், “திரைப்படத்துறை வரலாற்றில் வில்லன் இறந்த பிறகு நீதிமன்றத்தில் பேசிய வசனங்கள் ஒவ்வொன்றிற்கும் ரசிகர்கள் மத்தியில் கைதட்டல் பெற்ற படம் இந்த படம்தான். லியாகத் அலிகான் எழுதிய வசனங்கள் இன்றைய சூழலுக்கும் பொருந்தும். அன்றைக்கு வீரப்பனை நான் பார்த்ததில்லை. எப்படி இருப்பார் என்றே தெரியாது.
இரண்டு வருஷம் கழித்து ஒரு பையன் வந்தான். அவன் மூலம், வீரப்பன் மிரட்டல் விடுத்திருந்தார். என்னை எப்படி சாகடிக்கிற மாதிரி காட்டலாம், பிரபாகரனைத் தான் நான் சாகடிக்கிற மாதிரி காட்டனும் எனக் கூறியிருந்தார். அவர் கதாநாயகனாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருந்தார். அது பட வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதைவிட கேப்டனின் அன்பும் ரசிகர்களின் ஆதரவும் இன்னொரு முக்கியமாக காரணமாக அமைந்தது.
என் கதாபாத்திரத்தை காப்பாற்றியது இளையராஜா இசைதான். ஒவ்வொரு இடத்திலும் நான் வரும் போது பின்னணியில் அவர் போட்டிருந்த இசை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. முதலில் நான் இந்த படத்தில் சாதாரணமாகத்தான் நடிக்கவிருந்தேன். ஆனால் டைரக்டர் செல்வமணி என்னை சும்மா விடவில்லை. வசன உச்சரிப்பு இப்படித்தான் வேண்டும் என என்னை சுலுக்கெடுத்துவிட்டார். 34 வருஷத்துக்கு முன்னாடியே தமிழக அரசியலை தைரியமாக தோலுறித்து காட்டினார். அவர் ஒரு புரட்சி இயக்குநர்.
பட கிளைமாக்ஸில் காட்டியது போல், வீரப்பனை திட்டமிட்டுத்தான் கொலை செய்தார்கள். அவரை நிச்சயமாக சாகடித்திருக்க முடியாது. அவரை வைத்து பயனடைந்தவர்கள், தங்களின் பெயரரை அவர் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக கொலை செய்தனர். இன்றைக்கும் மக்கள் மனதில் வீரப்பன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கதாபாத்திரமாக அல்ல. உண்மையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் இருக்கும் போது காடுகள் நன்றாக இருந்தது. தண்ணீர் சரியாக வந்து கொண்டிருந்தது. அப்போது யாரும் அணைக் கட்ட யோசிக்கவில்லை. ஆனால் இப்போது... மறுபடியும் ஒரு வீரப்பன் பிறப்பான். நானும் மீண்டும் வருவேன்” என்றார்.