Skip to main content

‘என் இனிய தகப்பனே... பாசத்திற்குரிய மகன் பேசுகிறேன்’

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

manoj bharathiraja to direct bharathiraja in his debut movie

 

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா 1999 ஆம் ஆண்டு வெளியான 'தாஜ்மஹால்' படம் மூலம் நடிகராக திரைத்துறைக்கு அறிமுகமானார். இப்படத்தை பாரதிராஜாவே இயக்கியிருந்தார். தொடர்ந்து அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இதனிடைய சமுத்திரம், கடல் பூக்கள், மகா நடிகன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடைசியாக கார்த்தியின் 'விருமன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

 

இந்த நிலையில், மனோஜ் பாரதிராஜா தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் இசையில் இப்படம் உருவாகவுள்ளதாகவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக மனோஜ் பாரதிராஜா பணிபுரிந்துள்ளார். மேலும் 'விசில்' என்ற தலைப்பில் ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். தான் நடிகராக அறிமுகமான தாஜ்மஹால் படத்தை தனது அப்பா பாரதிராஜா இயக்கினார். அதுபோல தான் இயக்கும் முதல் படத்தில் தனது அப்பா பாரதிராஜாவை நடிக்க வைத்திருப்பதாகக் கூறுகின்றனர்.

 

இயக்குநர் பாரதிராஜா, அருள்நிதியுடன் இணைந்து ‘திருவின் குரல்’ மற்றும் தங்கர் பச்சான் இயக்கும் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' உள்ளிட்ட சில படங்களில் நடிக்கிறார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'தாய்மெய்' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாரதிராஜாவிற்கு வில்லனாக நடித்துள்ளேன்” - ஜி.வி. பிரகாஷ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
gv prakash speech at kalvan audio launch

ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசைப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பாரதிராஜா, "இயக்குநர் ஷங்கர் பிடிவாதக்காரன். நிச்சயம் அந்த பிடிவாதம் ஜெயிக்கும். சினிமாவில் அவனுக்குப் பெரிய இடம் காத்திருக்கிறது. இவானாவை ஒருநாள் திட்டிவிட்டேன். திறமையான நடிகை அவர். ஜி.வி. நல்ல இசையமைப்பாளர், நடிகர் அதைத் தாண்டி நல்ல மனிதர். வேறொரு டைமன்ஷனில் ஜிவியைப் பார்க்கலாம். இவானா சிறப்பாக நடித்துள்ளார். வெற்றிமாறன் போன்ற சிறந்த இயக்குநர் இங்கு இருப்பது சந்தோஷமான விஷயம்" என்றார். 

நடிகர் ஜி.வி. பிரகாஷ், "இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ பாரதிராஜா சார்தான். அவருக்கு நானும் தீனாவும் வில்லனாக நடித்துள்ளோம். இந்தப் படத்தில் அவர் நடிப்புக்காக நிச்சயம் தேசிய விருது வாங்குவார். அவருடன் நாங்கள் இருந்த நேரத்தை பொக்கிஷமாக வைத்திருப்போம். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். அவரும் ராஜா சாரும் தமிழ் சினிமாவின் கிராமர் புக், என்சைக்ளோபீடியா. இயக்குநர் ஷங்கர் மிகவும் திறமையானவர். அதை நீங்கள் படம் வரும்போது புரிந்து கொள்வீர்கள். இவானா, தீனா எல்லாரும் சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர் டில்லி பாபு சார், சக்திவேலன் சாருக்கு நன்றி. ஏப்ரல் 4 ரிலீஸ் தேதியும் சிறப்பாக அமைந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.

Next Story

பவதாரிணி உடலைப் பார்த்து கதறி அழுத பாரதிராஜா

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
bharathiraja tribute to bhavatharini

பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாகப் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், இலங்கையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி ஜனவரி 25 ஆம் தேதி மாலை உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்த இளையராஜா குடும்பத்தார் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

விமானம் மூலம் சென்னைக்கு வரவழைக்கப்பட்ட பவதாரிணியின் உடல், தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து இளையராஜாவின் சொந்த ஊரான தேனிக்கு பவதாரிணியின் உடல், நேற்று இரவு சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லப்பட்டது. பண்ணைபுரம் கிராமத்தில், இளையராஜா பண்ணை வீட்டில் தாயார் சமாதிக்கு அருகே பாடகி பவதாரிணி உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இதனிடையே பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பவதாரிணி உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாரதிராஜா, பவதாரிணி உடலுக்கு மாலை அணிவித்து கதறி அழுது அஞ்சலி செலுத்தினார். ஏற்கனவே எக்ஸ் தளத்தில், “என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன். மகள் பவதாரிணியின் மறைவு எங்கள் குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்” எனக் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.