
கரோனாவுக்குப் பிறகு தியேட்டர்களில் கூட்டம் குறைவாகவே வந்துகொண்டிருக்கிறது. விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தை தவிர்த்து மற்ற படங்கள் எதுவுமே ரசிகர்களை சொல்லிக்கொள்ளும் அளவு தியேட்டர்களில் வரவழைக்கவில்லை. இதனால், சமீபகாலத்தில் திரையரங்குகளுக்கு மக்களை வரவழைக்கும் நோக்கில் பழைய படங்களை தூசுதட்டி மீண்டும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்த வாரம் அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'பில்லா' படம் மீண்டும் தியேட்டர்களில் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
அதேபோல் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிப்பில் உருவான 'உலகம் சுற்றும் வாலிபன்' படமும் மீண்டும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், சிலம்பரசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'மன்மதன்' படம் மீண்டும் தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 'மன்மதன்' படம், தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு, புதுப்பொலிவுடன் வரும் மார்ச் 19-ம் தேதி மீண்டும் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. படத்தை நந்தினி தேவி ஃபிலிம்ஸ் தமிழ்நாடு முழுவதும் 150 தியேட்டர்களில் வெளியிடுகிறது.
'மன்மதன்' படத்தில் சிலம்பரசன் டி.ஆர்., முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான அத்தனை பாடல்களும் ஹிட்டடித்தன. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்தை சிலம்பரசன் கவனிக்க படத்தை ஏ.ஜே முருகன் இயக்கினார். சிலம்பரசன் டி.ஆர் உடன் ஜோதிகா, சிந்து துலானி, கவுண்டமணி, சந்தானம் எனப் பலரும் நடித்திருந்த இந்தப் படம் மீண்டும் ரிலீஸாகவிருப்பது சிலம்பரசன் டி.ஆர் ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)