ஜெயிலர் படத்தை தொடர்ந்து லைகா தயாரிப்பில் இரண்டு படங்கள் நடிக்க கமிட்டான ரஜினிகாந்த், அதில் முதல் படமாக லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து மற்றொரு படமாக த.செ.ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டான நிலையில் அப்படம் வேட்டையன் என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தை அடுத்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் வேட்டையன் படம் அக்டோபர் 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி, திருநெல்வேலி, மும்பை, சென்னை என பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இப்படத்தில் ரஜினியோடு இணைந்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு அமிதாப் பச்சனும் நடித்துள்ளார். இவர்களோடு மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் எனப் பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்த ஆண்டு ரஜினி பிறந்தாளன்று டிசம்பர் 12ஆம் தேதி வெளியானது. இதையடுத்து படத்தில் முதல் பாடலான ‘மனசிலாயோ...’ பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் ஹிட்டடித்தது.
மேலும் இசை வெளியீட்டு விழா வருகிற 20ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதனிடையே பணிகளை மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரஜினிகாந்த், ஃபகத் ஃபாசில் என படக்குழுவினர் அடுத்தடுத்து டப்பிங் பணிகளை தொடங்கினர். இந்த நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திர லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. அதன்படி முதல் கதாபாத்திர லுக் போஸ்டராக ரித்திகா சிங்கின் கதாபாத்திர போஸ்டர் வெளியானது. அவர் ரூபா என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதையடுத்து துஷாரா விஜயன் சரண்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக வீடியோ வெளியானது.
இவர்களைத் தொடர்ந்து தற்போது மஞ்சு வாரியரின் கதாபாத்திர அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி தாரா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாக தெரிவித்து படப்பிடிப்பில் அவர் நடித்த காட்சிகளை எடிட் செய்து சிறிய வீடியோவாகவும் படக்குழு வெளியிட்டுள்ளது.