
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு 9ஆம் தேதி கடும் மூச்சு திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நலம் சீராகி வீடு திரும்பினார். சஞ்சய் தத் விரைவில் குணமடைய வேண்டி திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்த நிலையில் அவர் தன்னுடைய உடல்நலம் மற்றும் திரைப்பயணம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், "வணக்கம் நண்பர்களே... சில மருத்துவ சிகிச்சைக்காக நான் என் வேலையில் இருந்து ஒரு குறுகிய கால ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். எனது குடும்பத்தினரும் நண்பர்களும் என்னுடன் இருக்கிறார்கள். கவலைப்படவோ அல்லது தேவையின்றி யூகிக்கவோ வேண்டாம் என்று எனது நலம் விரும்பிகளைக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பு மற்றும் வாழ்த்துகளுடன், நான் விரைவில் மீண்டும் வருவேன்" எனக் கூறியுள்ளார்.
அவருடைய உடல்நிலையில் உள்ள பிரச்சனை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானாலும், அதிகாரபூர்வமாக எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை. மருத்துவ காரணங்களுக்காக திரையுலகிலிருந்து சில காலம் விலகுவதாக நேற்று தன் சமூக வலைதள பக்கங்களில் சஞ்சய் தத் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சஞ்சய் தத் நான்காம் கட்ட நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு லீலாவதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதனை தொடர்ந்து பலரும் சஞ்சய் தத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை மனிஷா கொய்ராலா இதுகுறித்து தெரிவிக்கையில், “உங்களுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு பற்றி கேள்விப்பட்டது மிகுந்து வலியை ஏற்படுத்தியுள்ளது சஞ்சு பாபா. ஆனால், நீங்கள் ஒரு உறுதியான நபர். உங்கள் வாழ்க்கையில் ஏராளமான இன்னல்களைக் கடந்து வந்துள்ளீர்கள். இதுவும் உங்களுக்கு இன்னொரு வெற்றியாக அமையும். நீங்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்” என்றார்.
சஞ்சய் தத்துடன் இணைந்து ‘யால்கார்’, ‘சனம்’, ‘கர்டூஸ்’, ‘பாகி’ உள்ளிட்ட படங்களில் மனிஷா கொய்ராலா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.