manirathnam speech at ponniyin selvan success meet

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின்நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பொன்னியின் செல்வன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை உலக அளவில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகவுள்ளதாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisment

இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழு சார்பில் வெற்றி விழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த விழாவில் மணிரத்னம், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு பேசினர்.

Advertisment

இயக்குநர் மணிரத்னம் பேசுகையில், "எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. அதனால் முதலில் வணங்கிக் கொள்கிறேன். அமரர் கல்கி அவர்களுக்குத்தான் முதல் நன்றி. 'பொன்னியின் செல்வன்' நாவலைப் படிச்ச வாசகர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு ஆசை மற்றும் கனவு இருக்கும். அதனைத்திரைப்படமாகக் கொண்டு வருவது என்பது ஒரு பேராசை. அந்தப் பேராசையை அடைந்துவிட்டேன். இதனை அனுமதிச்சு அங்கீகரித்த அனைவருக்கும் நன்றி.

சுபாஷ்காரன் சார் கிட்ட நான் 'பொன்னியின் செல்வன்' பண்ணனும்னு சொன்னேன். உடனே இரண்டு நிமிடத்தில் ஓகே சொல்லிவிட்டார். இப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல் செயல்பட்டோம். அவர்கள் இல்லையென்றால் நிச்சயமாக இதை உருவாக்கி இருக்க முடியாது. முக்கியமாகக் கரோனா காலகட்டத்தில் யாரும் உடை எடையை ஏத்தாமல் இருந்ததற்கும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் மாறியதற்கும் நன்றி.

இப்படத்தில் உதவி இயக்குநர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என நிறையப் பேர் பணியாற்றினோம். அவர்களைப் பார்க்கும்போது பயமாக இருக்கும். இவ்வளவு பேர் நம்மைநம்பி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வேலை வாங்குவது ஒரு பெரிய பொறுப்பு எனத்தோன்றும். இது எப்படி நடக்கும் எனத்தெரியாது.ஆனால் அடுத்த வேளைக்குப் போகும்போது இதெல்லாம் மறந்திடும். அவர்கள் எல்லாரும் நம் கண்களுக்கு முன்னால்தெரியமாட்டார்கள் பின்னாடி தான் வேலை செய்கிறார்கள். ஆனால் அவர்களுடைய பங்களிப்பு மிகப் பெரியதாகக் கருதுகிறேன். என்னிடம் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. இருந்தாலும் பத்திரிகை, ஊடகம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி" எனப் பேசினார்.