Mandela Director

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகிபாபு, 'மண்டேலா' என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். சசிகாந்த் வழங்க, பாலாஜி மோகன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தைஅறிமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படத்திலுள்ள சில காட்சிகள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை இழிவு செய்யும் வகையில் உள்ளன என்ற சர்ச்சையும் கிளம்பியது.

Advertisment

இந்த விவகாரம் குறித்து படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் நக்கீரனிடம் பேசுகையில், "இந்தப் படம் புனையப்பட்ட கதைதான். படத்தின் தொடக்கத்திலேயே இதைக் குறிப்பிட்டுத்தான் படத்தை ஆரம்பிக்கிறோம். படத்தின் கதைக்களம் மாதிரியான சம்பவம் உண்மையில் நடக்க வாய்ப்பே இல்லை. நூறு ஓட்டுகள் பதிவாகிறது என்றால், பத்து ஓட்டுகள் அதில் எப்படியும் செல்லாதவையாகிவிடும். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வந்து நிற்பது என்பதே அதீத கற்பனைதான். அந்த ஊரில் உள்ள ஆதரவற்ற தனிமனிதன் மீது நடக்கும் அடக்குமுறையைத்தான் படத்தில் காட்டியிருக்கோம். எந்த சமூகத்தினரையும் இழிவுபடுத்த வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம் அல்ல. அப்படி பண்ண வேண்டும் என்று நினைத்திருந்தால் படத்தின் ஹீரோ கதாபாத்திரத்தையே அப்படி வடிவமைத்திருக்க மாட்டேன். ஒரே ஆளு எப்படி ஊரையே ஒன்று திரட்டி, தன்னுடைய ஓட்டினால் எல்லாத்தையும் மாற்றுகிறான் என்பதைத்தான் கதையாகப் பண்ணியிருக்கிறோம். இதையும் தாண்டி யாரையும் இழிவுபடுத்தும் வகையில் இருந்தால் நான் வருத்தப்படுகிறேன்" எனக் கூறினார்.

Advertisment