Mammootty's Team Dismisses Cancer Rumours

Advertisment

மலையாள முன்னணி மற்றும் மூத்த நடிகரான மம்மூட்டி கடைசியாக மலையாளத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘டாமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து ‘பஸூக்கா’ என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் கௌதம் மேனனும் நடித்துள்ள நிலையில் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து மோகன்லாலுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்து வருகிறார். மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படி பிஸியாக இருந்து வரும் மம்மூட்டி புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் உலா வந்து கொண்டிருந்தது. இதையொட்டி மேலும் சில தகவல்கள் வைரலாகி வந்தது.

இத்தகவலை மம்மூட்டி தரப்பு தற்போது மறுத்துள்ளது. இது தொடர்பாக மம்மூட்டியின் செய்தி தொடர்பாளர் ஒரு ஊடகத்திடம் பேசியபோது, “இது பொய்யான செய்தி. மம்மூட்டி ரம்ஜானுக்கு உண்ணாவிரதம் இருப்பதால் விடுமுறையில் இருக்கிறார். அதனால்தான் அவர் தனது படப்பிடிப்பு பணிகளிலும் விலகியுள்ளார். இந்த இடைவேளைக்குப் பிறகு அவர் மோகன்லாலுடன் மகேஷ் நாராயணன் இயக்கும் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்வார்” என்றுள்ளார்.