Advertisment

மீண்டு வந்த மம்மூட்டி; மகிழ்ச்சியுடன் வரவேற்ற மலையாளத் திரையுலகம்

24

இந்தாண்டு தொடக்கத்தில் மலையாள முன்னணி நடிகரான மம்மூட்டி, படப்பிடிப்பு பணிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். இதனால் அவருக்கு உடல் நலப் பாதிப்பு என்றும் புற்று நோய் இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இத்தகவலை மம்மூட்டி தரப்பு மறுத்திருந்தது. அவரது செய்தி தொடர்பாளர் ஒரு ஊடகத்திடம் பேசியபோது, ரம்ஜானுக்கு உண்ணாவிரதம் இருப்பதால் மம்மூட்டி விடுமுறையில் இருக்கிறார், பிறகு படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனத் தெரிவித்திருந்தார். 

Advertisment

இதனைத் தொடர்ந்து மம்மூட்டியின் நண்பரும் மற்றொரு மலையாள முன்னணி நடிகரான மோகன்லால், மம்மூட்டியின் முழுப் பெயரான ‘முகமது குட்டி’ என்ற பெயரில் சபரி மலையில் பூஜை செய்தார். இது தொடர்பான ரசீதும் அப்போது வெளியாகியிருந்தது. இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது பதிலளித்த மோகன்லால், எல்லோருக்கும் இருக்கும் பிரச்சனை தான் அவருக்கும், அவர் நலமாக இருக்கிறார் என்றிருந்தார். ஆனால் மம்மூட்டி தரப்பும் மம்மூட்டிக்கு நெருங்கிய வட்டாரமும் அவருக்கு என்ன பிரச்சனை என்பது பற்றி வெளிப்படையாக இதுவரை சொல்லவில்லை. 

இந்த நிலையில் மம்மூட்டியின் தனிப்பட்ட செயலாளரும் அவரது தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான ஜார்ஜ், மம்மூட்டியின் உடல் நலம் குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிரார்த்தனை செய்தவர்களுக்கும், என்னுடன் நின்றவர்களுக்கும் நன்றி” எனக் கூறி மம்மூட்டி புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். இதனை மம்மூட்டி சார்பில் அவர் பகிர்ந்துள்ளதாக மலையாள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அவர் பூரண குணமடைந்துவிட்டதாகத் தெரியும் சூழலில் அவருக்கு திரை பிரபலங்கள் தொடர்ந்து வாழ்த்து கூறி வரவேற்றுள்ளனர். 

மோகன்லால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மம்மூட்டிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து தனது அன்பை வெளிப்படுத்தியிருந்தார். அதே போல் பிரித்விராஜ், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் தங்களது சமூக வலைதளப்பக்கம் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளனர். மம்மூட்டி நடிப்பில் கடைசியாக பஸூக்கா படம் கடந்த ஏப்ரலில் வெளியாகியிருந்தது. இதையடுத்து ‘களம்காவல்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தை அடுத்து மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மோகன்லாலுடன் 16ஆண்டுகளுக்குப் பிறகு ‘பேட்ரியாட்’ படத்தில் நடிக்கவுள்ளார். படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் அடுத்த கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

malayalam cinema, Mammootty mohanlal mollywood
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe