மலையாள முன்னணி மற்றும் மூத்த நடிகரான மம்மூட்டி கடைசியாக ‘பஸூக்கா’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகியிருந்தது. இதையடுத்து ‘கலாம்காவல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து மோகன்லாலுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்து வருகிறார். மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

இந்த நிலையில் திரைத்துறையில் 50 ஆண்டுகளாக பயணித்து வரும் மம்மூட்டியை அவர் பி.ஏ. படித்த மஹாராஜாஸ் கல்லூரி கௌரவித்துள்ளது. கேரளா கொச்சியில் உள்ள இந்த கல்லூரியில் பி.ஏ. வரலாறு பட்டப்பட்டிப்பில் இரண்டாம் ஆண்டு பாடத்திட்டத்தில் ‘மலையாள சினிமாவின் வரலாறு’ எனும் தலைப்பில் மம்மூட்டியின் திரை வாழ்க்கை ஒரு பாடமாக இடம் பெற்றுள்ளது. இதில் அவரது சினிமா பயணம் விரிவாக பேசப்பட்டுள்ளது. 

மம்மூட்டியை தவிர்த்து சத்யன், பிரேம் நசீர், மது, மோகன்லால், ஜெயன், ஷீலா, சாரதா, அடூர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பத்மராஜன் போன்ற பழம்பெரும் நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்களின் சினிமா பயணமும் அந்த பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடத்திட்டம் 2025-2026 கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும்.