Malayalam producer Johnny arrested

மலையாளத்தில் சக்ரம், பாடிகார்ட், முப்பத்து வெள்ளிக்காசு உள்ளிட்ட பல்வேறு படங்களைத்தயாரித்தவர் ஜானி சாகரிகா. இவரிடம் கனடாவில் வசித்து வரும் உதயசங்கர், கடந்த 2016-ம் ஆண்டு ஒரு படத்தின் தயாரிப்புக்காக ரூ.2.75 கோடி கொடுத்துள்ளார். இதில் ஜானி, ரூ.50 லட்சம் மட்டுமே திருப்பி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து உதயசங்கர் ஜானி மீது கோவை குற்றப்பிரிவில் புகார் கொடுத்துள்ளார். அதில் மீதமுள்ள பணத்தை திருப்பி கேட்டபோது ஜானி தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். புகாரின் பேரில் கோவை குற்றப்பிரிவு போலீசார் ஜானி தாமஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்பு அவருக்கு லுக் அவுட் நோட்டிஸூம் கொடுக்கப்பட்டது.

பின்பு வெளிநாடு செல்ல முயன்ற தயாரிப்பாளர் ஜானியைக் கொச்சி போலீசார் கொச்சி நெடும்பஞ்சேரி விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். பின்பு கோவை குற்றப்பிரிவு போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். இது மலையாளத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.