மலையாளத்தில் மிமிக்ரி ஆர்டிஸ்டாகவும் நடிகராகவும் வலம் வந்தவர் கலாபவன் நவாஸ். 1995ஆம் ஆண்டு வெளியான ‘சைதன்யம்' படம் மூலம் நடிகராக அறிமுகமான இவர், மிமிக்ஸ் ஆக்ஷன் 500, ஹிட்லர் பிரதர்ஸ், ஜூனியர் மாண்ட்ரேக், மாட்டுப்பெட்டி மச்சான், அம்மா அம்மாய்யம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சின்னதிரையிலும் சில சீரியல்களில் நடித்துள்ளார். நடிப்பு, மிமிக்ரியை தாண்டி, காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சில படங்களில் பாடகராகவும் பணியாற்றியுள்ளார்.
இப்போது ‘பிரகம்பனம்’ படத்தில் நடித்து வந்தார். படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நேற்று தனது படப்பிடிப்பை முடித்து விட்டு ஹோட்டல் அறைக்கு சென்றுள்ளார். அவர் நேற்றுடன் ஹோட்டலை விட்டு செக்கவுட் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வரவில்லை. அதனால் அவரது அறைக்கு சென்ற ஹோட்டல் ஊழியர், கலாபவன் சுயநினைவின்றி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்பு அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவரின் மறைவுக்கு என்ன காரணம் என்று இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இப்போது அவரது உடல் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வெளியானதும் இறப்புக்கான காரணம் தெரியவரும். இவரது இறப்பு கேரள திரையுலகில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பல்வேறு கேரள திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கலாபவனுக்கு வயது 51. இவரது மனைவி ரெஹ்னாவும் ஒரு நடிகை. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இவரது தந்தை அபுபக்கர் மற்றும் சகோதரர் நியாஸ் பக்கரும் ஒரு நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.