Malayalam actor, ex MP Innocent passed away

பிரபல மலையாள நடிகரான இன்னசென்ட் நேற்று இரவு காலமானார் (75). மலையாள திரையுலகில் 5 தசாப்தங்களைக் கடந்துள்ள இவர் கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து புற்று நோயினால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். அதையேஒரு புத்தகமாகவும் எழுதியுள்ளார். பின்பு சிகிச்சை பெற்று குணமடைந்தார். இதையடுத்து படங்களில் நடித்து வந்த இன்னசென்ட் இம்மாத முதல் வாரத்தில் தொண்டை வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கொரோனா தொற்று இருந்ததாகவும் பல உறுப்புகள் செயல்படாதது காரணமாகவும் உயிரிழந்ததாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

திரைத்துறையில் 750க்கும் மேலான திரைப்படங்களில் நடித்த இவர் தமிழில் 'லேசா லேசா', 'நான் அவளை சந்தித்த போது' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளம் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களை ரசிக்க வைத்தவர். நகைச்சுவை தாண்டி முக்கியக் கதாபாத்திரத்திலும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமில்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வந்த இவர் 1979-1982 காலகட்டத்தில் முனிசிபாலிட்டி கவுன்சிலராகவும் 2014-2019 காலகட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

Advertisment

இவரது மறைவு மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயன், நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் உள்ளிட்ட பலரும் சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்னசென்ட் கடைசியாக நடித்துள்ள ’பாசுவும் ஆல்புத்த விளக்கும்’ என்ற மலையாள திரைப்படம் அடுத்த மாதம் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.