கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தனுஷ் 43'. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கிய படக்குழு, குறுகிய காலத்திலேயே முதற்கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளது.
நடிகர் தனுஷ், ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா செல்ல இருப்பதால் அடுத்தகட்ட படப்பிடிப்பை மே மாதத்தில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், தனுஷுடன் நடித்த அனுபவம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தனுஷ், உங்களைச் சந்தித்ததும், உடன் பணியாற்றியதும் மகிழ்ச்சியளிக்கிறது. பிறருக்கு தொற்றிக்கொள்ளும் சிரிப்பு, உங்களிடம் இருந்து தினமும் புதிய விஷயங்களைக் கற்றது, மேகியின் மீது நம் இருவருக்கும் இருந்த அன்பு அனைத்தையும் தவறவிடுவேன். அடுத்த கட்டப் படப்பிடிப்பைத் தொடங்க காத்திருக்க முடியவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.