Makeup Artist Das

கடந்த 55 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் பிஸியான மேக்கப் கலைஞராக பணியாற்றி வரும் தாஸ் அவர்களைநக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதன் சிறு பகுதி பின்வருமாறு...

Advertisment

"1963ஆம் ஆண்டு வெளியான மங்கம்மா சபதம் என்ற தெலுங்கு படத்தில் தான் முதன்முதலில் உதவியாளராக சேர்ந்தேன். அதன் பிறகு தெலுங்கு படத்தில் தான் தொடர்ந்து வேலை பார்த்தேன். சவாலே சமாளி என்ற படம் தான் என்னுடைய முதல் தமிழ்ப்படம். அதன் பிறகு வசந்த மாளிகை, அன்பே ஆருயிரே என அடுத்தடுத்து படங்கள் பண்ணேன். சிவாஜி கணேசனோடு நிறைய படம் வேலை பார்த்தேன். மேக்கப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர் சிவாஜி. ராஜ்பாட் ரங்கதுரை படத்தில் ’நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வரல...’ என்ற பாடலில் பஃபூன் வேஷம் போட்டு அவர் நடித்தபோது நான் அழுதுவிட்டேன். வசந்த மாளிகை படத்தில் விஸ்கிதான குடிக்க வேண்டாம்னு சொன்ன, விஷம் குடிக்க வேண்டாம்னு சொல்லலயே என்ற வசனம் வந்தபோது கண்ணீர் வந்துவிட்டது. அந்த அளவிற்கு அவர் நடிப்பை பக்கத்தில் இருந்து நான் ரசித்திருக்கிறேன். அந்தக் குள்ளன எங்கடா, அடிக்கடி காணாம போய்டுறான் என்று என்னைப் பற்றி பிறரிடம் கேட்பார்.

Advertisment

தலைமுடி, தாடியெல்லாம் வெள்ளையா இருக்கும்போது புருவம் மட்டும் ஏன் கருப்பா இருக்கு என்று கிண்டலாக அவரிடம் கேட்பேன். முகம் நல்லா தெரியனும்னா புருவம் கருப்பா இருக்கனும்டா என்பார். ’நாங்கள்’ படத்தில்தான் முதன்முதலாக சிவாஜியை தொட்டு மேக்கப் போட்டேன். அந்தப் படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் எடுத்தார்கள். மலையாளத்தில் நடித்த மம்முட்டிக்கு நான் மேக்கப் போட்டேன். வழக்கமாக சிவாஜிக்கு மேக்கப் போடும் என்னுடைய குரு அன்று வரவில்லை. அது எனக்குத் தெரியாது. என்னிடம் வந்த சிவாஜி, ஏன்டா குள்ளா நான் வந்துருக்கேன் மேக்கப் போட வரமாட்டியா என்றார். இல்லணா நான் மம்முட்டிக்கு போட்டுக்கிட்டு இருக்கேன். ஏன் மம்முட்டிதான் உனக்கு பெரிய ஆளா என்றார். ஐயோ அண்ணா அப்படிலாம் இல்ல என்றதும் சரி வந்து ஒட்டு வை என்றார்.

நான் ஒட்டு வைத்ததும் என்னை கையெடுத்து கும்பிட்டார். அதைப் பார்த்ததும் எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. அண்ணே நான் உங்ககிட்ட அசிஸ்டண்டா இருந்தவன், என்னலாம் கும்பிடாதீங்கனே என்று சொன்னதற்கு நீதான்டா இப்ப குரு என்றார். எங்களை அழகா காட்டுறதே நீங்கதான்டா என்று அடிக்கடி சொல்வார். மேக்கப் கலைஞர்களை மிகுந்த மரியாதையோடும் கனிவோடும் நடத்தக்கூடியவர் சிவாஜி".