நாடாளுமன்றத்தில் ஆக்ரோஷமான பேச்சாளராக அறியப்படுபவர் மஹுவா மொய்த்ரா. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர், கடந்த மே மாதம் இரண்டாவது திருமணமாக பிஜு ஜனதா தள முன்னாள் எம்.பி பினாகி மிஸ்ராவை கரம் பிடித்து அவருடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் தனது க்ரஷ் பற்றி மனம் திறந்துள்ளார் மஹுவா மொய்த்ரா. ஒரு ஆங்கில ஊடகத்தில் பேட்டியளித்த அவர், பாலிவுட் சினிமா தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், “நடிகர் பங்கஜ் திரிபாதியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் நடித்த மிர்சாபூர் சீரிஸை பார்த்திருக்கிறேன். அவர் ஒரு கூலான நடிகர் என நினைக்கிறேன். அவர் தான் என் கிரஷ். மிர்சாபூரை தாண்டி கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூரும் எனக்கு பிடிக்கும். அவர் நடித்த நெகட்டிவ் ரோல்கள் எனக்கு பிடிக்கும். அவரது தீவிர ரசிகன் நான்.
ஒரு முறை பங்கஜ் திரிபாதியை சந்திக்க ஆசைப்பட்டேன். ஆனால் அவர் யாரையும் சந்திப்பதில்லை. பின்பு நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கிஷன் மூலம் பங்கஜ் திரிபாதியிடம் போனில் பேச வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த தருணத்தில் எனக்கு மிகவும் கூச்ச சுபாவமாக இருந்தது. மிகுந்த மகிழ்ச்சியில் இருந்ததால் நான் பேசவே இல்லை” என்றார்.