தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் கவனம் செலுத்தி வருபவர் மகிமா நம்பியார். தமிழில் சாட்டை படம் மூலம் அறிமுகமாகி இரவுக்கு ஆயிரம் கண்கள், மகாமுனி, சந்திரமுகி 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடைசியாக பிக் பாஸ் தர்ஷன் நடித்த ‘நாடு’ படத்தில் நடித்திருந்தார். இப்போது சூரி நாயகனாக நடிக்கும் ‘மண்டாடி’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தன் மீது அவதூறு பரப்பப்படுவதாக தெரிவித்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் மகிமா நம்பியார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டகிராம் ஸ்டோரியில், “இன்ஸ்டாகிராம் மற்றும் ஒரு யூடியூப் சேனலில் ஒரு குறிப்பிட்ட நபரின் செயல்களை நான் பொறுமையாகக் கவனித்து வருகிறேன், அவரது செயல் தொடர்ந்து கொண்டு வருகிறது. உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் நான் தலையிட மாட்டேன், அதே மரியாதையை நீங்களும் என்னிடம் காட்ட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தும் வகையிலும் குற்றச்சாட்டும் வகையிலும் பேசுவது சரியானது அல்ல. இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளேன். இதுதான் உங்களுக்கு கடைசி எச்சரிக்கை” எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த நபர் யார் என்பதை அவர் சொல்லவில்லை. இவரது இந்த எச்சரிக்கை திரை வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.