மகேஷ் பாபு, ஸ்ரீ லீலா நடிப்பில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குண்டூர் காரம். இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ். ராதா கிருஷ்ணா தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சங்கராந்தி விழாவை முன்னிட்டு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி இப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் ரூ.170 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே படத்தில் இடம்பெற்ற ‘குர்ச்சி மடத்தபெட்டி’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும்வரவேற்பை பெற்றது. பாடலில் இடம் பெற்ற நடனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. யூ-ட்யூபில் தற்போது வரை 158 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் வலம் வந்தது.
இந்த நிலையில் இப்பாடல் அமெரிக்கா வரை பரவியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் நகரில், கூடைப்பந்து விளையாட்டின் போது, மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் அதில் நடனமாடிய கலைஞர்கள், ‘குர்ச்சி மடத்தபெட்டி’ பாடலுக்கும் நடனமாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.