உத்தர பிரதேசத்தில் இந்தாண்டு தொடக்கத்தில் நடந்த கும்பமேளாவில் பாசி மணி விற்ற மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே(16) என்ற பெண், தனது கண்கள் மூலம் பிரபலமடைந்தார். இவரது புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக அது பாலிவுட்டில் அவருக்கு வாய்ப்பு பெறும் வரை சென்றது. அதன் பிறகு அவர் ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறிப்போனார்.
பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, தான் அடுத்து இயக்கும் ‘தி டைரி ஆஃப் மனிப்பூர்’ படத்திற்கு மோனலிசாவை கமிட் செய்திருந்தார். ஆனால் அப்பட இயக்குநர் மற்றொரு பெண் கொடுத்த பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பிறகு பட பணிகளில் ஈடுபடவில்லை எனத் தெரிகிறது. படம் குறித்த எந்த தகவலும் அதன் பிறகு வெளியாகவில்லை.
இதையடுத்து மோனலிசா கேரளாவில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சென்றிருந்தார். அவரைக் காண அப்போது நிறைய மக்கள் கூடியிருந்தனர். இந்த நிலையில் மோனலிசா மலையாளத் திரையுலகில் அறிமுகமாகிறார். நாகம்மா என்ற தலைப்பில் உருவாகும் படத்தில், அவர் நடிக்கிறார். இப்படத்தில் நாயகனாக கைலாஷ் நடிக்க பினு வர்கீஸ் இயக்குகிறார். ஜீலி ஜார்ஜ் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை கேரளா கொச்சியில் நடந்து முடிந்துள்ளது. படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பரில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.