Skip to main content

மோசடி வழக்கில் அடுத்தடுத்து சிக்கும் பாலிவுட் பிரபலங்கள்

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

Mahadev App issue ed send summon to bollywood actors huma qureshi shraddha kapoor

 

சத்தீஸ்கரை சேர்ந்த சவுரப் சந்திரகர் அவரது நண்பர் ரவி உப்பால் இருவரும் சேர்ந்து மாகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை செயல்படுத்தி வந்தனர். இந்த செயலி தேர்தல் முடிவுகளை கணிப்பது முதல் வானிலை முன்னறிவிப்புகள் என பல்வேறு துறைகளில் நான்கு ஆண்டுகள் செயல்பட்டு வந்துள்ளது. இதில் கோடிக்கணக்கில் பண மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில், அமலாக்கத்துறை செயலியின் செயல்பாடுகளை கண்காணிக்க தொடங்கியது. 

 

இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த செயலி செயல்பட்டு வருவதும் 70-30 சதவீத விகிதத்தில் கிளைகளை நடத்தி வருபவர்களுக்கு லாப பங்கீடு கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த மாதம் கொல்கத்தா, போபால், மும்பை ஆகிய இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை 417 கோடி ரூபாய் பறிமுதல் செய்ததாக அறிவித்தது. 

 

இந்த செயலியின் உரிமையாளர்களில் ஒருவரான சவுரப் சந்திரகரின் திருமணம் கடந்த பிப்ரவரியில் துபாயில் நடைபெற்றது. ரூ.200 கோடி செலவில் இந்த திருமணம் நடந்ததாக அமலாக்கத்துறையினரால் தெரிவிக்கப்பட்ட நிலையில், இதில் 17 பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு ஹவாலா முறையில் பணம் அனுப்பப்பட்டதாகக் கூறியுள்ளது. 

 

இதில் ரன்பீர் கபூர் கலந்து கொண்டுள்ளதாகவும் செயலியை விளம்பரம் செய்ய பணம் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராக அவகாசம் கேட்டுள்ளார். இதையடுத்து ஷரத்தா கபூர், ஹுமா குரேஷி, கபில் சர்மா, ஹினா கான் உள்ளிட்ட பிரபலங்களுக்கு, துபாய் திருமணத்தில் கலந்துகொண்டு ஹவாலா முறையில் பணம் பெற்றுள்ளார்களா என்பது குறித்து விசாரிக்க, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அவர்களும் நேரில் ஆஜராக அவகாசம் கேட்டுள்ளனர். இந்த மோசடி வழக்கில் முன்னணி பாலிவுட் பிரபலங்களுக்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்