madras high court order illegal sites banned on leo movie release

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் நாளை (19.10.2023) வெளியாகிறது.

Advertisment

இதற்கு முன்னதாக இசை வெளியீடு ரத்து, ட்ரைலரில் விஜய் பேசிய வசனம், சென்சார் செய்யாமல் திரையரங்கில் திரையிட்டது, அதன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்களின் செயல், நடனக் கலைஞர்கள் ஊதிய புகார் எனப் பல்வேறு சர்ச்சைகளில் இப்படம் சிக்கியது. இதனிடையே படக்குழுவிற்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகத் தமிழக அரசு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியது. அதன்படி 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

இதையொட்டி பல்வேறு திரையரங்குகளில் முன்பதிவு டிக்கெட் கட்டணம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து சிறப்புக் காட்சிகளுக்குத் தமிழக அரசு, முதல் காட்சி காலை 9 மணி முதல் தொடங்கி கடைசி காட்சியை நள்ளிரவு 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்தது. மேலும் சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் படம் பார்க்க வரும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தியது.

இதனிடையே லியோ படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில், 19 ஆம் தேதி காலை 9 மணிக்கான சிறப்புக் காட்சியை 4 மணிக்கே திரையிட சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. மேலும் வரும் 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை சிறப்புக் காட்சிகளை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கில் 4 மணி காட்சிக்கு அனுமதி தர மறுத்தது நீதிமன்றம். மேலும் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவு செய்யும் என்றும் தெரிவித்தது.

Advertisment

இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் அவர்களின் வழக்கறிஞர் குழு 7 மணி காட்சிக்கு அனுமதி வேண்டி உள்துறைச் செயலாளரிடம் மனு கொடுத்தனர். மனுவை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்த உள்துறை செயலாளர் அனுமதி தர மறுத்துவிட்டார். எனவே தமிழகம் முழுவதும் 9 மணிக்கே முதல் காட்சி தொடங்குகிறது.

இந்த நிலையில் லியோ படத்தை சட்ட விரோதமாக 1246 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க கோரி பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதையடுத்து சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.