Skip to main content

மாதவனின் மிஷன் சக்சஸ் ஆனதா..? ராக்கெட்ரி விமர்சனம்

 

Is Madhavan's mission successful? Rocketry Review

 

எந்த ஒரு கடினமான விஷயத்தை விமர்சிக்கும் போதும், இது என்ன பெரிய ராக்கெட் சயின்ஸா? என்று நாம் எளிதாக கூறிவிட்டு கடந்து சென்றுவிடுவோம். அப்படி உண்மையில் ராக்கெட் சயின்ஸ் என்றால் என்ன, அதில் இருக்கும் சாதகம் பாதகம் எவ்வளவு, அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன, அதனால் நம் நாட்டுக்கு என்ன லாபம் கிடைக்கிறது போன்ற பல விஷயங்களை அசால்டாக சொல்லியிருக்கிறது விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை   மையமாக வைத்து உருவாகியுள்ள ராக்கெட்ரி திரைப்படம்.

 

1970 களிள் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் எரிபொருள் திட வடிவத்திலேயே இருந்தது. அந்த சமயம் எதிர்காலத்தில் திரவ எரிபொருள் தான் ராக்கெட்களில் பயன்படுத்தப்படும் என்பதை முன்கூட்டியே கணித்து அதற்கான ஆராய்ச்சியில் இறங்கி, அதில் வெற்றியும் பெற்று, இன்று இந்திய ராகெட்டுகளை இயக்கும் விகாஸ் என்ற எஞ்சினையும் கண்டுபிடித்து உலக நாடுகளை திரும்பி பார்க்க வைக்கிறார் விஞ்ஞானி நம்பி நாராயணன். இப்படி நம் நாட்டுக்காக பல சாதனைகள் செய்த அவர் 1994 ஆம் ஆண்டு இந்திய ரகசியங்களை பாகிஸ்தானுக்கு தாரை வார்த்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை என்னவானது, உண்மையில் அவர் குற்றம் செய்தாரா அல்லது நிரபராதி என்று நிரூபிக்கபட்டாரா இல்லையா? இதனால் அவரும் அவரது குடும்பமும் பட்ட துயரங்கள் என்ன? என்பதே ராக்கெட்ரி திரைப்படமாக விரிகிறது.

 

பல்வேறு சாதனைகளையும், சோதனைகளையும் சந்தித்த விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை படத்தை நடித்து, இயக்கியுள்ள மாதவன் அந்த கதாபாத்திரத்திற்கு என்ன நியாயம் செய்யமுடியுமோ அதை கச்சிதமாக செய்து பாராட்டுகளை அள்ளியுள்ளார். சிகை அலங்காரம், மெலிந்த மற்றும் சற்று குண்டான உடலமைப்பு, தனது பற்களை உடைத்துக்கொண்டு அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான முக வடிவத்தை மாற்றியது என தன் உடலை வருத்தி அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் ஊட்டியுள்ளார் மாதவன். அதேபோல் ஒரு இயக்குநராகவும் பல்வேறு டெக்னிக்கல் விஷயங்களை சிறப்பாக கையாண்டு ஒரு தேர்ந்த இயக்குநர் என்ற பெயரையும் இப்படத்தின் மூலம் எடுத்துள்ளார் மாதவன். கதை இந்தியாவில் ஆரம்பித்து பல்வேறு உலக நாடுகளை சுற்றி வருகிறது. ஒவ்வொரு நாடுகளுக்கு ஏற்றார்போல் அந்தந்த விண்டேஜ் காலகட்டத்தை சிறப்பாக அப்படியே கண்முன் நிறுத்தி படத்தை உலகத்தரத்தில் கொடுத்துள்ளார் இயக்குநர் மாதவன். குறிப்பாக மெய்சிலிர்க்க வைக்கும் வசனங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். பல்வேறு நாடுகளுக்கும் நமக்கும் உள்ள விஞ்ஞான அரசியல் பின்னணியை சிறப்பாக விளக்கி காட்சிகளுக்கு உயிரூட்டி உள்ளார். அதேபோல் கிளைமாக்ஸ் காட்சிகளில் பார்ப்பவர் கண்களை கலங்க செய்து நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

 

படத்தில் நம்பி நாராயணனின் மனைவி வேடத்தில் நடித்திருக்கும் சிம்ரன் சில காட்சிகளில் தோன்றினாலும் அளவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார். இந்த வயதிலும் இவருக்கும் மாதவனுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. இவரைத் தவிர்த்து மாதவனின் நண்பனாக நடித்திருக்கும் ஜெகன் மற்றும் அவரின் மகளாக நடித்திருக்கும் மிஷா ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்துள்ளனர். மற்றபடி படத்தில் நடித்த பல்வேறு முகங்கள் தெரியாத முகங்களாகவே இருந்தாலும் அவர்கள் அனைவருமே அவரவர் வேலையை நிறைவாக செய்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள சூர்யா படத்திற்கு வலு கூட்டியுள்ளார்.

 

சிரிஷா ராய் ஒளிப்பதிவில் காட்சிகள் உலகத்தரம். குறிப்பாக வின்டேஜ் காலகட்டத்தை அந்தந்த நாடுகளுக்கு ஏற்றார்போல் சிறப்பாக காட்சிப்படுத்தி அந்த ஊரை அப்படியே கண்முன் நிறுத்தியுள்ளார். சாம் சி எஸ் இன் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக எமோஷனல் காட்சிகளுக்கான இசையை சிறப்பாக கையாண்டுள்ளார்.

 

இப்படி ஒரு சவாலான கதையை எடுத்துக்கொண்டு அதை சிறப்பாக கையாண்டுள்ள மாதவன், படம் முழுவதும் வரும் பல டெக்னிக்கல் விஷயங்களை எளிமைபடுத்தாமல் அப்படியே நம்முள் கடத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் அது பல இடங்களில் ரசிகர்களுக்கு புரியாமல் இருப்பது சற்று மைனஸ் ஆக அமைந்துள்ளது. அதேபோல் திரைக்கதையும் மிதமான வேகத்திலேயே பயணிப்பதும் ஆங்காங்கே சில இடங்களில் சற்று அயர்ச்சி ஏற்படுத்துவதையும் தவிர்க்க முடியவில்லை. புதியதோர் களத்தில் பலரும் அறியாத ஒரு உண்மை கதையை சிறப்பாக கூறியதற்காகவே இப்படத்தை காணலாம்.

 

ராக்கெட்ரி - மிஷன் சக்சஸ்!