மாதவன் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான படம் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு'. இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் சூர்யா (தமிழில்) சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தமிழ், இந்தி மற்றும் ஆங்கில மொழியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, திரை பிரபலம் ரஜினிகாந்த் உள்ளிட்ட ரசிகர்கள் பலரும் படத்தை பார்த்து பாராட்டியிருந்தனர்.
இதனிடையே சில தினங்களுக்கு முன்பு ஓடிடி-யில் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' படம் வெளியானது. இருப்பினும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஓடிடி-யில் ராக்கெட்ரியை பார்த்துவிட்டு தியேட்டர்களுக்கு செல்லும் அனைவருக்கும் அன்பும் நன்றியும்." என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.