மாதவன் தற்போது இந்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் கடைசியாக டெஸ்ட் படத்தில் நடித்திருந்தார். தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கியிருந்த இப்படம் கடந்த ஏப்ரலில் நேரடியாக ஓடிடியில் வெளியாகியிருந்தது. இந்தியில் கடைசியாக ‘ஆப் ஜெய்சா கோய்’ படத்தில் நடித்தார். இப்படமும் நேரடியாக ஓடிடியில் கடந்த ஜூலை மாதம் வெளியாகியிருந்தது. இப்போது, ‘தே தே பியார் தே 2’ மற்றும்
‘துரந்தர்’ என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார். 

Advertisment

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் லடாக் பகுதியில் உள்ள லே என்ற ஏரியாவில் கடும் மழை காரணமாக சிக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஆகஸ்ட் மாத இறுதியில், லடாக்கில் உள்ள மலை உச்சிகளில் ஏற்கனவே பனிப்பொழிவு ஏற்பட்டிருந்தது. கடந்த நான்கு நாட்களாக இடைவிடாத மழை காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால் நான் லேவில் சிக்கிக்கொண்டேன். அது எப்படியோ, நான் ஒவ்வொரு முறையும் லடாக்கில் படப்பிடிப்புக்காக வரும் போது இப்படித்தான் சிக்கிக் கொள்கிறேன். 

நான் கடைசியாக 2008-இல் பாங்காங் ஏரியில் ‘3 இடியட்ஸ்’ படப்பிடிப்புக்காக இங்கு வந்தேன், ஆகஸ்ட் மாதத்தில் திடீரென பனிப்பொழிவு ஏற்பட்டதால் நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது, அதே போல் இப்போது காத்திருக்கும் சூழல் வந்துள்ளது. ஆனால் இன்னும் இப்பகுதி மிக அழகாக இருக்கிறது. இந்த நிலை விரைவில் சரியாகும் என நினைக்கிறேன். அதே போல் விரைவில் வீடு திரும்புவேன் என நம்புகிறேன்” என்றார்.