'சாக்லேட் பாய்' என்றால் பெண்களுக்குப் பிடித்த சாக்லேட் போன்று அவர்களைக் கவரக்கூடிய அழகைத் தன் வசம் வைத்திருப்பவர் என்று சொல்லலாம். தமிழ் சினிமாவில் அவ்வப்போது 'சாக்லேட் பாய்'கள் வருவதுண்டு. அதில் 90'ஸ் கிட்ஸ்க்கு தெரிந்த மிகப்பெரிய சாக்லேட் பாய் என்றால் அது 'மேடி'தான்.

Advertisment

madhavan

'மேடி' என்றால் தமிழ் முதல் ஹிந்தி சினிமா வரை தெரிந்த பெயர்.ஆர்.மாதவன்,ஹிந்தி சூழலில் வளர்ந்த தமிழர். அவருடைய தொடக்க காலத்தில் ஹிந்தி நாடகங்களில் நடித்த பின்னர் மணிரத்னத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். தமிழில் முதல் படமான அலைபாயுதேவிலேயே அவருக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து ரசிகர்களும், குறிப்பாக ரசிகைகளும் கிடைத்துவிட்டனர். நீல சட்டை, இழுத்து சிரித்தால் கன்னத்தில் குழி, அதுடன் வாயில் சிக்லெட்டை மென்றுகொண்டு, காதில் வாக்மேனில் பாட்டு கேட்டுக்கொண்டு, பைக்கில் வளைந்து வளைந்து வரும்பொழுதே ரசிகைகள் குறுக்கே விழுந்துவிட்டனர். தோற்றத்தில் நூறு மார்க் என்றால், நடிப்பில் தொண்ணூறு போட்டார். அது அவரது முதல் படம் என்று யாராலும் சொல்லமுடியாத அளவுக்கு நடித்தார் மாதவன்.

maddy irudhi

Advertisment

படத்தில் இவரது ஸ்டைல், பாடல்களுக்கு ஆடிய நடனம், ஏன் அவரது சிங்கப்பல் முதல்கொண்டு எல்லாமே எல்லோரையும் கவர்ந்தது. "நீ அழகாயிருக்கனு நினைக்கல, உன்ன லவ் பண்ணனும்னு தோணல. ஆனால், இதெல்லாம் நடந்திருமோனு பயமா இருக்கு" என்று அவர் ஷாலினியிடம் ப்ரொபோஸ் செய்யும் தருணத்தில் அப்போதைய கல்லூரி இளவட்டப் பெண்கள் ஒவ்வொருவரும் மாதவன் தனக்கே சொல்வதைப் போல நினைத்து ஏற்றுக்கொண்டனர். ஷாலினியைத் தேடி கேரளா சென்று அவரைக் காணாத பதற்றத்தில் புகை பிடிக்கும் காட்சியில் 'மிஸ்' பண்ணுவதென்றால் என்ன என்று அப்போதைய காதலர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். 'மேடி' க்ரேஸில் இருந்த பெண்களை முதல் படத்திலேயே ஏமாற்றிவிட்டார். அவர் சினிமாவுக்கு வரும்பொழுதே திருமணமானவர் என்று முதல் படம் வெற்றிகரமாக ஓடிய பின்னர்தான் தெரியவந்தது.

'மின்னலே'வில் ஆக்ஷன் காதல், ரன் படத்தில் பக்கா ஆக்ஷன், தம்பி மற்றும் எனக்குள் ஒருவன் போன்ற படங்களில் சினம் கொண்ட சமூக அக்கறை கொண்ட இளைஞனாக நடித்தார். முதலில் தன்னை சாக்லேட் பாயாகக் காட்டிய அதே மணி இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் பக்கா சென்னை ரவுடியாகவும் நடித்திருக்கிறார். (பலர் ஏற்றுக்கொள்ளவில்லையென்றாலும்) இவர் இவரது படங்கள் மூலம் ஃப்ளாப், ஓகே மற்றும் ஹிட் என்று தமிழ், ஹிந்தி இரண்டு சினிமாத்துறைகளிலும் அனைத்து நிலைகளையும் பார்த்திருக்கிறார்.

mady

Advertisment

நடுவில் ஒரு நான்காண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்டு, மீண்டும் வந்தபோது அது ஒரு ரியல் கம்-பேக்காக இருந்தது. கட்டுமஸ்தாக உடம்பை ஏற்றிக்கொண்டு இறுதிச்சுற்று படத்தில் கிக்பாக்ஸராக வந்து ஆண்களையும் கவர்ந்தார். விக்ரம் வேதாவில் விஜய் சேதுபதியுடன் விளையாடி இன்றும் அவருக்கே உண்டான இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார் இந்த சாக்லேட் பாய், ஆக்ஷன் ஹீரோ, மெத்தட் ஆக்டர், மேடி. ஜூன் 1, அவருக்குப் பிறந்த நாள். அவருக்கு ஐம்பது வயது நெருங்கிவிட்டது என்கிறார்கள், நம்புகிறீர்களா???