
மாதவன் - அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சைலண்ட் சஸ்பென்ஸ் மர்டர் மிஸ்டரி திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை கோபி மோகன் உடன் இணைந்து கதை மற்றும் திதைக்கதையை எழுதுவதோடு இணை தயாரிப்பாளராவும் பணிபுரிகிறார் கோனா வெங்கட். ஹேமந்த் மதுகர் இப்படத்தை இயக்குகிறார். மேலும் இதுகுறித்து அவர் பேசியபோது....
"நான் உண்மையிலேயே உறைந்து போய் இருக்கிறேன். பல வருடங்களாக நடிப்பில் மகத்தான சாதனையை புரிந்திருக்கும் மிகச்சிறந்த நடிகர்கள் இந்த படத்துக்கு கிடைத்திருப்பது, என்னை மிகக் கடுமையாக உழைக்க, அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல உந்துகிறது. குறிப்பாக, இது ஒரு சைலண்ட் த்ரில்லராக இருப்பதால் அது முழுமையாக 'நடிகர்கள்' மற்றும் 'தொழில்நுட்ப கலைஞர்கள்' சார்ந்தது, அதற்கேற்ற வகையில் சிறப்பானவர்களை கண்டறிந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மாதவனின் அர்ப்பணிப்பு அபாரம். அதனால் தான் அப்படிப்பட்ட திரைப்படங்கள் அவரை விரும்புகின்றன. அவரின் சமீபத்திய கதைகளில், சிறந்த நடிகராக ப்ரீத் சீரீஸிலும், மிகக்கடுமையான பயிற்சியாளராக இறுதிச்சுற்று படத்திலும் அவர் ஸ்கோர் செய்ததை பார்த்தாலே புரியும். அவர் 'சாக்லேட் பாய்' என்று சொல்லப்படுவதை விரும்புவதில்லை, மாறாக தன் திறமைகளை மேம்படுத்தும் கதைகளை நடிக்கவே விரும்புகிறார். இந்த படம் அவரது மகுடத்தில் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அனுஷ்கா ஷெட்டியின் எந்த சூழ்நிலையிலும் அவரது நடிப்பை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தி தான் ஒரு 'அற்புதமான நடிகை' என்று நிரூபித்தவர். இந்த படத்தில் அவரின் கதாப்பாத்திரத்துக்கு இது போன்ற குணங்கள் தேவைப்பட்டது. அனுஷ்காவை தவிர யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் சுப்பாராஜு ஆகியோர் மொழி மற்றும் எல்லைகளை கடந்து தங்கள் திறமையால் பிரபலமானவர்கள். அவர்களும் இந்த படத்தில் நடிப்பது பலம். குறிப்பாக கோனா வெங்கட் சார் மற்றும் கோபி மோகன் சார் எழுதிய கதை மற்றும் திரைக்கதையை திரையில் மொழி பெயர்க்கும் செயல்முறையை அனுபவிப்பதில் ஒரு இயக்குனராக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு சைலண்ட் சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்த படத்தில், ATMOS ஒலி வடிவமைப்பு, பின்னணி இசை மற்றும் மிக நேர்த்தியான காட்சியமைப்புகள் என ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் உயர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களை கொண்டு இதுவரை உணர்ந்திராத மிகச்சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறார்கள். இதற்காக தான் மொத்த குழுவும் கடுமையாக உழைத்து வருகிறோம்" என்றார்.
1500 திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தை காஸ்மோஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ், கிரண் ஸ்டுடியோஸ் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கிறது.