சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் கடந்த 5ஆம் தேதி வெளியான படம் ‘மதராஸி’. இப்படத்தை ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் தயாரித்திருக்க சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால் வில்லனாகவும் பிஜு மேனன், ஷபீர், விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். அனிருத் இசைப்பணிகளை மேற்கொண்டுள்ளார். இவரது இசையில் வெளியான ‘சலம்பல’ பாடல் ஹிட்டடித்தது.
ரசிகர்கள் மத்தியில் இப்படம் கலவையான விமர்சனத்தை மட்டுமே பெற்று வருகிறது. வசூலை பொறுத்தவரை முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 12.8 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. படத்தின் வரவேற்பு குறித்து நாயகி ருக்மிணி வசந்த் நெகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் பக்க வாயிலாக நன்றி கூறியுள்ளார். இதையடுத்து படத்தில் இருந்து ‘தங்கபூவே’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் படத்தில் இருந்து எங்களது அனுமதி இல்லாமல் காட்சிகள் இணையத்தில் வெளிவருவதாக தயாரிப்பு நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தப் படம் பலரின் கூட்டு முயற்சியில் எடுக்கப்பட்டது. படத்தின் வரவேற்பிற்கு ரசிகர்களுக்கு நன்றி. இந்த கொண்டாட்ட தருணத்தில், கவலையான விஷயமும் நடக்கிறது.
பல்வேறு சமூக வலைதள பக்கங்கள், ஆர்டிஸ்டுகள் மற்றும் குழுக்கள் படத்தில் பணியாற்றிய நிலையில் அவர்கள் படப்பிடிப்பு புகைப்படங்கள், மேக்கிங் வீடியோக்கள் மற்றும் பிற அங்கீகரிக்கப்படாத உள்ளடக்கத்தை பதிவிட்டு வருவதை நாங்கள் கவனித்துள்ளோம். இது தயாரிப்பாளர்களுக்கு செய்யும் அநீதி.
அப்படிச் செய்யும் எந்தவொரு கணக்குகளும் ரிப்போர்ட் செய்யப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தில் இருந்து எந்தவொரு உள்ளடக்கமும் வெளியானால் அதற்கு முதலில் எங்களிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.