சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ளப் படம் ‘மதராஸி’. ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர், விக்ராந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசைப்பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இப்படத்தின் முதல் பாடலான ‘சலம்பல’ பாடல் கடந்த ஜூலை மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து புரொமோஷன் பணிகளில் ஏ.ஆர்.முருகதாஸ் பல நேர்காணல்களைக் கொடுத்து வந்தார். தொடர்ந்து படக்குழுவும் பெங்களூர், கோயம்புத்தூர், கொச்சி, ஹைதரபாத் என ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தினர். படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது. மொத்தம் படத்தில் ஒன்பது பாடல்கள் வெளியிடப்பட்டது. அதே நேரம் படத்தின் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது. ஆக்ஷன் நிறைந்த படமாக இப்படம் இருக்குமென தெரிந்தது. இப்படம் தமிழ். மலையாளம், தெலுங்கு உட்பட மொத்தம் ஐந்து மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் நாளை வெளியாகவுள்ளது. முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் பாட்டு ஹிட்டடித்தும், இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடத்தியும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிதளவு எதிர்பார்ப்பு இல்லை. குறிப்பாக சிவகார்த்திகேயனின் அமரன் படம் மெகா ஹிட்டடித்தும் மதராஸி படத்திற்கு எதிர்பாப்பு குறைவாகவே இருக்கிறது. இந்த நிலையில் படக்குழு ஹிட்டடித்த ‘சலம்பல’ பாடலின் ஒரு நிமிட வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளது. லிரிக் வீடியோவில் இடம்பெற்றது போல் சிவகார்த்திகேயன் துள்ளல் நடனம் இதில் ஆடுகிறார்.