சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி மற்றும் மதராஸி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் பராசக்தி படத்தை சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வர படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மதராஸி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வர மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் மதராஸி படம் சிவகார்த்திகேயனின் அடுத்த படமாக வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் மதராஸி படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர், விக்ராந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது. பின்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. இப்படம் தமிழ். மலையாளம், தெலுங்கு உட்பட மொத்தம் ஐந்து மொழிகளில் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆடியோ உரிமையை ஜங்க்லீ மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.
படத்தின் டைட்டில் கிளிம்ஸ் கடந்த பிப்ரவரியில் வெளியானது. ஆக்ஷன் நிறைந்த காட்சிகளுடன் அந்த கிளிம்ஸ் அமைந்திருந்தது. இந்த நிலையில் படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் அனிருத் ஸ்டூடியோவிற்கு செல்ல அங்கு ஏ.ஆர்.முருகதாஸ் இருக்கிறார். பின்பு அவரிடம் எப்ப வந்திங்க சார் என சிவகார்த்திகேயன் கேட்க, இரண்டு விரலை காண்பிக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அதற்கு இரண்டு மணிநேரமா என சிவகார்த்திகேயன் கேட்க, இரண்டு நாள் எனக் கூறுகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். உடனே ஐ எம் வெய்ட்டிங் சொன்னவரையே வெய்ட் பண்ண சொல்லிருக்காங்க நம்ம பாய்ஸ் என கிண்டலிடித்து கொண்டு ஏ.ஆர்.முருகதாஸை உள்ளே அழைத்து செல்கிறார். அங்கு அனிருத் இல்லாமல் இருக்க, இருவரும் தேடிய போது, கீ போர்டுக்கு அடியில் ஒரு கருவியை ரிப்பேர் செய்து வருகிறார்.
பின்பு பாடல் டிஸ்கஷனை மூவரும் ஆரம்பிக்கின்றனர். அப்போது பாடலுக்காக சூழ்நிலையை விவரிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், நாயகனுக்கு லவ் ஃபெயிலியர், அதனால் அவன் சோகத்தில் இருக்கிறான். ஆனால் மத்தவங்களுக்கு அது சிரிப்பாக இருக்கிறது. அதே சமயம் நாயகனை அவர்கள் கடந்து செல்ல ஊக்குவிக்கின்றனர். இதை மையப்படுத்தி இருக்க வேண்டும் என சொல்கிறார். இதையடுத்து பாடலாசிரியர் பாடல் சொல்ல, தொடார்ந்து கலகலப்புடன் ப்ரோமோ அமைந்துள்ளது. பாடலுக்கு ‘சலம்பல’ எனப் பெயரிட்டுள்ளனர். இப்பாடலை சூப்பர் சுபு எழுத இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பாடுகிறார். பாடல் நாளை(31.07.2025) வெளியாகவுள்ளது. இப்பாடல் காதல் தோல்வியை மையப்படுத்தி உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.