Skip to main content

ஹாலிவுட் படத்திற்கு வசனம் எழுதும் மதன் கார்கி....

Published on 21/06/2019 | Edited on 21/06/2019

அனிமேஷன் படங்களை உயர்ந்த தொழில்நுட்பத்தின் மூலம் மிக லைவாக படங்களை ஹாலிவுட்டில் உருவாக்கி வருகின்றனர். அதில் ஒரு முயற்சிதான்  ‘ஜங்கிள் புக்’. இந்த படத்தை இயக்கிய பேவ்ரூதான் தற்போது  ‘தி லைன் கிங்’ படத்தையும் இயக்கியுள்ளார். இது அடுத்த மாதம் வெளியாக உள்ளது. லைன் கிங் அனிமேஷன் படமாக வெளிவந்த காலகட்டத்திலிருந்து அந்த படத்திற்கென தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.
 

mathan

 

 

ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு உண்டு.பெரும்பாலும் ஆங்கில அனிமேஷன் திரைப்படங்களுக்கு ஹாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் பின்னணி குரல் கொடுப்பதுண்டு. அந்த வகையான முயற்சிகள் இந்திய சினிமாவில் நடப்பது அரிதான விஷயம். தற்போது டிஸ்னி இந்தியாவின் அதீத முயற்சிகளால் அவெஞ்சர்ஸ் போன்ற ஆங்கில திரைப்படங்கள், ஒரு சில அனிமேஷன் திரைப்படங்களுக்கு இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளின் முன்னணி நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேச முன்வந்திருக்கிறார்கள்.
 

இந்நிலையில், டிஸ்னியின் மிக பிரமாண்டமான லைவ் ஆக்ஷன் படமான  ‘தி லைன் கிங்’ படத்துக்கு பின்னணி குரல் கொடுக்க முன்வந்திருக்கிறார் ஷாரூக் கான். மற்றும் அவரது மகன் ஆர்யன். ஷாரூக் கான்,  லையன் முபாசாவுக்காக குரல் கொடுக்கிறார். முபாசாவின் மகனும், முக்கிய கதாபாத்திரமுமான சிம்பாவுக்காக ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் குரல் கொடுக்கிறார். தமிழிலும் இதுபோல முன்னணி நடிகர்கள் டப்பிங் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் யாரும் கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக பிரபல தமிழ் வசன எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர்  மதன் கார்கி இந்த படத்திற்கான தமிழ் வசனங்களை எழுத இருக்கிறார்.
 

‘பத்மாவதி’, ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பாகுபலி’ என ஏற்கெனவே வேற்றுமொழிப் படங்களுக்குத் தமிழ் வசனங்களை எழுதியுள்ளார் மதன் கார்க்கி. அத்துடன், ‘2.0’, ‘எந்திரன்’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’ எனப் பல தமிழ்த் திரைப்படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வருகின்ற ஜூலை 19ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மிக பிரமாண்டமாக வெளியாகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழை வளர்ப்பதற்கான மதன் கார்க்கியின் புதிய முயற்சி!

Published on 16/07/2020 | Edited on 16/07/2020
mathan karky

 

 

பாடலாசிரியர் மதன் கார்க்கி தமிழ் மொழிக்காகவும், தமிழ் பாடல்களுக்காகவும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல முயற்சிகளை செய்து வருகிறார். அந்த வகையில் எளிமையான முறையில் தமிழ் பறிற்றுவிக்கும் இணைய வகுப்புகளை, கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் இணைய வகுப்புகளாக தொடங்கியுள்ளது. இந்த பாடத்திட்டத்திற்கு ‘பயில்’ என்று பெயரிட்டுள்ளார்.

 

மேலும் இதுகுறித்து மதன் கார்க்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த மூன்று மாதங்களில் நூற்றுக்கணக்கானோர் இந்த வகுப்புகளில் தமிழ் பயின்று வருகிறார்கள். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சைப்ரஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்கள் இந்த வகுப்புகளில் இணைந்துள்ளனர். 

 

‘எழுது’, ‘பேசு’, ‘இலக்கணம்’, ‘இலக்கியம்’ என்ற நான்கு வகுப்புகள் இந்த பயில் இணைய அரங்குகளில் வழங்கப்படுகிறது. அனைத்து வயதினரும் இணைந்து பயிலலாம். ஒரே வகுப்பில் எட்டு வயது சிறுவர் சிறுமியரும், எழுபது வயது முதியவர்களும் ஒன்றாகக்கூடி தமிழ் பயின்று வருகிறார்கள். இரண்டு ஆண்டு ஆராய்ச்சியில் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடத்திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

 

தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுப்பதை வாழ்நாள் கனவாகக்கொண்ட புலம்பெயர்ந்த தமிழர்களின் கனவு முப்பது நாட்களில் நனவாகியிருக்கிறது. மதுரையில் உள்ள குயீன் மீரா பன்னாட்டுப்பள்ளி நிர்வாகம் பயில் பாடத்திட்டத்தை தேர்ந்தெடுத்து தங்கள் மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருகிறார்கள். 

 

பாடல்கள், கதைகள், ஓவியங்கள் போன்ற கலைவடிவங்களோடு இணைய விளையாட்டுக்களின் மூலம் தமிழ் பயிற்றுவிக்கும் இந்த முறை, இந்த தலைமுறை குழந்தைகளையும் பெற்றோரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 

 

பயில் பாடத்திட்டத்தின் ‘எழுது’ வகுப்பு மிக எளிமையான புதுமையான முறையில் தமிழ் எழுத்துகளை அறிமுகம் செய்து எழுத்தின் ஒலிகளுக்கான விதிகளையும் விளக்குகிறது. முப்பது நாட்களின் முடிவில் இந்த வகுப்பில் பயின்ற மாணவர்கள் கதைகள் படிக்கவும் எழுதவும் தொடங்கியுள்ளனர்.

 

‘பேசு’ வகுப்புகள் பேச்சுத்தமிழுக்கான எளிய விதிகளையும் வெவ்வேறு சூழல்களில் பேசப்படும் சொற்களையும், சொற்றொடர்களையும் வரைபடங்கள் கொண்டு விளக்குகிறது. இந்த வகுப்பில் பயின்ற மாணவர்கள் அச்சமின்றி தமிழில் பேசத்தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியரோடும் பிற மாணவர்களோடும் பேசி விளையாடும் விளையாட்டுகளால் இந்த வகுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

 

முப்பது நாட்களில் தமிழ் இலக்கண அடிப்படையை பயிற்றுவிக்கும் ‘இலக்கணம்’ வகுப்பு எளிமையான முறையில் படிப்படியாக தமிழ் இலக்கணத்தை விளக்குகிறது.

 

சங்க இலக்கியம் முதல் தற்காலத் திரைப்பாடல்கள் வரை வெவ்வேறு கதைகள், பாடல்கள், இலக்கிய வகைகளை அறிய, சொற்களையும் பொருளையும் புரிந்து கொள்ள, இலக்கியங்களைப் பாராட்டக் கற்றுக்கொள்ள ‘இலக்கியம்’ வகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘உச்சி மீது வானிடிந்து வீழுகின்றபோதிலும்’ என்ற ஆசிரியரின் வரியை நீங்கள் எப்படி மாற்றி எழுதுவீர்கள்? ‘மீன் பிடித்து மீண்டும் ஆற்றில்விட ஆசை’ என்ற வரியில் ஏன் ஆசிரியர் மீனை மீண்டும் ஆற்றில் விட வேண்டும் என்கிறார்? போன்ற கேள்விகளால் சிந்தனையையும், ஆற்றல் திறனையும் வளர்க்கும் நோக்கில் ‘இலக்கிய,’ வகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

www.karky.in/payil என்ற இணைய தளத்தில் இந்த வகுப்புகளைப் பற்றிய விவரங்களை அறியலாம். உலகெங்கும் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு இந்தப் பாடத்திட்டத்தை எடுத்து செல்லும் முயற்சியிலும் மொழி குறித்த ஆராய்ச்சிகளிலும் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுவருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

'வாழ்க்கை ஒரு வட்டம் என்று இப்படம் சொல்கிறது'- சித்தார்த் கலகல பேச்சு

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

வருகிற 19ஆம் தேதி உலகம் முழுவதும்  ‘தி லயன் கிங்’ படம் வெளியாகிறது. லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் படமாக வெளியாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது. ஹிந்தி மொழியில் ஷாருக்கானும், அவரது மகனும் டப்பிங் பேசுகிறார்கள். அதுபோல தமிழிலும் முன்னணி நடிகர்களான சித்தார்த், அரவிந்த்சாமி, சிங்கம்புலி, ரோபோ சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட நடிகர்கள் டப்பிங் பேசுகிறார்கள்.
 

sidharth

 

 

இந்நிலையில், இந்த படத்தின் புரோமோஷனுக்காக வைக்கப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் சித்தார்த், அரவிந்த்சாமி, சிங்கம் புலி, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது நடிகர் சித்தார்த்திடம்,  ‘முதலில் சிம்பா ஒரு அழகிய குட்டியாக வரும், பின்னர் பல்வேறு சவால்களை கடந்து காட்டின் ராஜாவாக மாறும் இதுபோல அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு டிரான்ஸிஸன் நடக்கும், உங்களுடைய வாழ்க்கையில் அப்படி எதை சொல்வீர்கள்’ என்று கேள்வி கேட்கப்பட்டது.
 

அதற்கு பதிலளித்த சித்தார்த், “என் வாழ்க்கையில் தற்போதுவரை முதல் பாதிதான் நடக்கிறது. எனக்கு எவ்வளவு வயதானாலும் என்னை ஒரு சிறு பையனை போலதான் பார்க்கிறார்கள். ஆனால், இந்த படத்தில் வரும் முக்கியமான கருத்து என்ன என்று பார்த்தால் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதுதான். அதை மிக அருமையாக சொல்லியிருப்பார்கள். இதை ஒரு கார்டூன் படமாக பார்த்தபோது கூட இந்த கருத்துக்கள் எல்லாம் ஆழமாக பதிந்தது. இதே கதையை நான் நியூயார்க் நகரில் நாடக மேடையில் பார்த்தேன். அதுவே உங்களை ஸ்தம்பித்து போகிற அளவிற்கு இம்பிரஸ் செய்யும்” என்று கூறினார்.