பிரபல சமையல் நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் கடந்த ஜூலையில் இணையத்தில் வைரலானது. இதனை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் ஆகிவிட்டதாகவும் நான் 6 மாதம் கர்பமாக இருப்பதாகவும் அப்போது தெரிவித்திருந்தார். ஆனால் அடுத்த மாதமே மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தார். புகார் தொடர்பாக 26ஆம் தேதிக்குள் மாதம்பட்டி ரங்கராஜ் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீலாங்கரை காவல் துறையினர், சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதனிடையே ஜாய் கிரிசில்டா, சமூக வலைதளங்களில் மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு அவரை குற்றம் சாட்டி வந்தார். மேலும் இது குறித்து யூட்யூப் சேனல்களில் பேட்டியும் கொடுத்து வந்தார். இதனால் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னைப் பற்றி அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் சமூக வலைதளங்களில் இருக்கும் அந்த வீடியோக்களை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில், ‘ஜாய் கிரிசில்டா மீது தான் வைத்திருந்த நம்பிக்கையை அவர் தவறாக பயன்படுத்தி தான் ஏமாற்றிவிட்டதாக தெரிவிக்கிறார். அவரின் பேட்டி காரணமாக தனது இரண்டு குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு எதிராக அவர் அவதூறு கருத்துகளை தெரிவிக்க தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிடப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி, இருவருக்கும் இடையேயான உறவு குறித்து எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காத நிலையில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி வரும் 22ஆம் தேதிக்குள் மனு தொடர்பாக ஜாய் கிரிசில்டா பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்துள்ளார்.
இந்த வழக்கு போல் ஜாய் கிரிசில்டா மீது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில், இன்னொரு வழக்கும் தொடுக்கப்பட்டது. இது ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து சமூக வலைதளங்களில் குற்றம் சுமத்துகையில் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் டேக் செய்து வந்ததால், அது தொடர்பாக அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.