Skip to main content

மாமன்னன் ரிலீஸ் தேதி குறித்து உதயநிதி

 

maamannan release update

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளன. இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. சிறப்பு விருந்தினராக கமல் பங்கேற்றார். உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

இசை வெளியீட்டு விழாவில் டிரைலரும் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் ட்ரைலர் வெளியாகவில்லை. மேலும் இம்மாதம் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்த நிலையில் ரிலீஸ் தேதி குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் நேற்று நடந்த விழாவிற்கு வருகை தந்த உதயநிதி, விழா தொடங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியது, "ஏ.ஆர் ரஹ்மான், வடிவேலு, மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ் என பெரிய டீமுடன் அமைந்தது ஒரு நல்ல விஷயமாக பார்க்கிறேன். மாரி செல்வராஜ் படங்களில் என்ன எதிர்பார்க்கிறோமோ அது அனைத்தும் இப்படத்தில் இருக்கிறது. அவருடைய அரசியல் இப்படத்திலும் பேசப்பட்டிருக்கிறது. 

 

எனக்கும் அவருக்கும் நல்ல புரிதல் இருந்தது. அடுத்ததாக நான் ஒரு படம் நடிக்கும் சூழல் வந்தால் அது என் படத்தில் தான் இருக்க வேண்டும் என மாரி செல்வராஜ் சொல்லியிருக்கிறார். அடுத்த 3 வருடம் கண்டிப்பாக படம் நடிக்கமாட்டேன். அதன் பிறகு எனக்கு தெரியவில்லை. அதை மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். மாரி செல்வராஜ் கேட்டதற்கு, அடுத்து நான் மீண்டும் படம் நடித்தால் அது உங்கள் இயக்கத்தில் தான் நடிப்பேன் என வாக்குறுதி அளித்திருக்கிறேன். இப்படம் சமூக நீதி அரசியலை பேசியிருக்கிறது. மாரி செல்வராஜின் முந்தைய படங்களை விட நிறைய அரசியலை இப்படம் பேசியிருக்கிறது. ஜூன் 29 இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்" என்றார்.