
சிவகார்த்திகேயனை அடுத்து சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகர், தொகுப்பாளர் மா.கா.பா.ஆனந்த். 'வானவராயன் வல்லவராயன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் நடிப்பில் அடுத்ததாக 'பஞ்சுமிட்டாய்' படம் வரும் ஜூன் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தன் எதிர்கால திட்டம் குறித்து நடிகர் மா.கா.பா.ஆனந்த் ஒரு பேட்டியில் பேசுகையில்.... "டிவி, சினிமா இரண்டிலுமே பயணிக்க ஆசைப்படுகிறேன். பாண்டிராஜ், தம்பி ராமையா என்று எனது தந்தை இடத்தில் இருப்பவர்களிடம் ஆலோசனைகள் அறிவுரைகள் பெற்றுக் கொள்கிறேன். எல்லாவற்றையும் முயற்சிக்க சொல்கிறார்கள். எனக்கு சினிமா இதுவரை முழுநேர பணியாக மாறவில்லை. டிவிக்கு தான் முக்கியத்துவம் தருகிறேன். வாய்ப்பு வருகிற படங்களில் நடிக்கிறேன். ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கலாம் என்று நினைத்தேன். இருந்தும் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தில் அவருக்கு நண்பராக நடிக்கிறேன். நண்பராக நடிக்க வைக்க அவர்கள்தான் யோசித்தார்கள். ஆனால் நான் யோசிக்கவில்லை. கதாநாயகனாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கவில்லை. எந்த வேடமாக இருந்தாலும் சரி. தயாராக இருக்கிறேன்" என்றார்.