Skip to main content

“அந்த பார்ட்டியில் விஜய் சொன்னது” – சுவாரசியம் பகிரும் பாடலாசிரியர் விவேகா 

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

viveka

 

மனிதனுக்கு பாடல்களும் இசையும் இல்லாத  வாழ்வு முழுமையான வாழ்வு  இல்லை. நம்முடைய வாழ்வின் வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, தனிமை என அனைத்து நிகழ்வுகளிலும் துணையாக இருப்பது பாடல்களும், இசையும் தான். இப்படி பாடல்களைக்  கொண்டாடும் நமக்கு அது உருவாகும் விதம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. படத்தின் இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என அனைவரும் விவாதித்து ஒரு பாடல் முழுமை பெறும் விதம் நிச்சயம் ஒரு அலாதியான அனுபவம். அந்த வகையில் நக்கீரன் ஸ்டுடியோ யூடியூப் சேனலில் வரும் பாட்டுக் கதை தொடரின் இரண்டாவது பாகத்தில் பாடலாசிரியர் விவேகா ‘நண்பன்’ திரைப்படத்தில் தான் வரிகள் எழுதிய ‘என்  ஃபிரண்ட போல யாரு மச்சான்’ பாடலின் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…

 

இந்த பாடலில் இயக்குநர் ஷங்கருக்கும் உங்களுக்கும் இருந்த எதிர்பார்ப்பு பற்றி...

 

ஷங்கர் சார் எப்போதும் ஒரு கச்சாப் பொருளோடு வருவார். நாம் பாடலுக்குள் நுழையும் முன்னாடியே அவர் பாடலுக்கு என்னென்ன வேணும் என்று எதிர்பார்ப்போடு ரெடி பண்ணிட்டு வருவார். பாடலுக்காக காலை முதல் மாலை வரை ஒரு நாள் முழுவதும் அவரது ஆபிஸில் உட்கார்ந்து  உருவானது இந்த பாடல். அவர் சொன்னார், இதற்கு முன்பு ‘முஸ்தபா  முஸ்தபா’ பாடல் தான் நண்பர்களுக்கான தேசிய கீதம் மாதிரி இருந்தது. இந்த பாடல் அந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்றார். அதன் பிறகுதான் இந்த பாடல் நண்பர்களுக்கான கொண்டாட்ட பாடலாக மாறி விட்டது.

 

ஷங்கர் சார் வந்து பாடலுக்கான சூழல் சொல்லும் போது, பிரிந்து இருக்கிற  ஒரு நண்பனை, எங்கேயோ இருக்கிற நண்பனை பற்றி அவர்கள்  ஏக்கத்தோடு பாடுகிற படத்துக்கான முகப்பு பாடல். அப்போது முதலில்  நண்பன் போல யாரு மச்சான்  என்றுதான் யோசித்தோம். அப்புறம் தான் என் ஃபிரண்ட போல யாரு மச்சான் என்று எழுதினேன். அந்த நண்பனுக்கான ஒரு பாடலாக மாறி விட்டது. அதற்கு பிறகு, நட்பு பாடல் வரிசையாக வந்தது, மாமா மச்சான் பிரண்ட்ஷிப்  என்ற பாட்டு வல்லினத்தில், ஏலே தோஸ்துடா இப்படி நிறைய பாட்டு எழுதினேன். அந்த மாதிரி  பாட்டு  வேணும் என்று கேட்க ஆரம்பித்து விட்டனர். அதில் பார்த்தால், ஓபனிங்ல பாக்கும் போது  இந்த பாடல் ஒரு  ஃபன்னான பாடலாக தொடங்கி  அதன் உள்ளே உள்ள வரிகள், அழகாக கவித்துவமாக மாறும்.

 

‘தோழனின் தோள்களும் அன்னை மடி 
அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி 
காதலை தாண்டியும் உள்ள படி 
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி...’

 

நட்பு என்பது காதலையும் தாண்டி எவ்வளவு முக்கியமானது. ஏனென்றால் காதல் என்பது உடல் சார்ந்த எதிர்பார்ப்பு. வாழ்க்கை சார்ந்து ஏதோ ஒரு எதிர்பார்ப்பு மூலம் நிகழ்வது காதல். நட்பு அப்படி இல்லை. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், உனக்காக நான்; எனக்காக நீ என்கிற எண்ணங்கள் எந்தவித சம்மதமும் இல்லாமல் கிடைக்கிற உறவு நட்பில் மட்டுமே சாத்தியம். எனக்கும் அது போன்ற அபூர்வமான நட்புகள் அமைந்துள்ளது. அதனால் நட்பைப் பற்றி எழுதும்போது அந்த பாட்டு அவ்வளவு இயல்பாக வந்தது. இன்று கல்லூரிகளும், நண்பர்கள் தினத்தன்றும் கூட ‘தோழனின் தோள்களும்’ வரிகளைக் குறிப்பிட்டுக் கொண்டாடுவதைப் பார்க்கிறேன். அதை நான் ஒரு முக்கியமான ஒரு வாய்ப்பு என்று பார்க்கிறேன். ஷங்கர் சாருக்கும், ஹாரிஸ் ஜெயராஜ் சாருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

 

இந்த பாடலை எழுதும் போது நினைவுக்கு வந்த நட்பு பற்றி....

 

எனக்கு மிகச்சிறந்த நண்பன் என்று ஒருவனைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், முருகேசன். இப்போது பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக உள்ளான். பள்ளியில் படிக்கும் போதிருந்து சென்னையில் அறைகளில் தங்கி இருக்கும் வரையிலும் உள்ள நட்பு. சென்னை வந்த பிறகு ஒரே அறையில் தங்கி இருந்தோம். இப்போதும் கூட என் வீட்டு பக்கத்தில் ரெண்டு தெரு தாண்டி தான் உள்ளான். அடிக்கடி ரெண்டு பேரும் சேர்ந்து வாக்கிங் கூட செல்வோம். அப்படி ஒரு நல்ல நெருக்கமான நட்பு. ஆறாம் வகுப்பு முதல் இப்போது வரைக்கும் உள்ள நட்பு. எங்க அப்பாவை பார்க்க எனக்கு நேரமில்லை என்றால், நான் அவனை போயி பார்த்துட்டு வா என்று சொல்லுவேன். அவ்வளவு நீண்ட கால நட்பு.

 

பாடல் உருவாகும் போது நிகழ்ந்த ஏதேனும் ஒரு சுவாரசியம்....

 

நிறைய அனுபவம் இருக்கு. ஷங்கர் சார் மிகப்பெரிய ஆளுமை. இருபத்தைந்து ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகை தன் உள்ளங்கையில் வைத்துள்ள பெரும் ஆளுமை. ஹாரிஸ் ஜெயராஜ் கொடுக்காத வெற்றி இல்லை. விஜய் சார் தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய உச்ச நட்சத்திரம். இவர்களோடு கலந்து எழுதுகிறோம் என்பது சுவாரசியமான அனுபவம். இந்த பாடலை பொறுத்தவரைக்கும், ஷங்கர் சாருக்கு நாம் எழுதுகிறோம், அவருடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்று இருந்தது. கே.வி.ஆனந்த் சார் சொல்லுவார். ஷங்கர் சார் உடன் பணியாற்றும் போது அவருடனும் ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். அப்போது அவர் சொன்னார், அவர் படத்துக்கு பாட்டு எழுதுவது என்பது, உங்க படத்துக்கு அவரு வந்து பாட்டு எழுதுவது போன்ற அனுபவம். சூப்பரா இருக்குமேனு சொன்னார். அது மாதிரி அந்த பாடலுக்கு நிறைய கச்சாப் பொருள் அவரிடம் இருக்கும். அவருடைய படத்தில் பாட்டு எழுதுவது ரொம்ப எளிதாக இருக்கும். புதுப்புது வார்த்தைகள் வேண்டும் என்று கேட்பார். நான் நிறைய பாடல்கள் ஸ்டுடியோவில் உட்கார்த்து எழுதுவது இயல்பாக வரும். கந்தசாமி பட பாடல்கள் எல்லாம் ஸ்டுடியோவில் உட்கார்ந்து ஆன் தி ஸ்பாட்ல எழுதியது தான். அந்த அனுபவம் தான் ஷங்கர் சார் அலுவலகத்தில் உட்கார்ந்து பாட்டு எழுதும் போது அது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.

 

விஜய்க்கும், உங்களுக்கும் உள்ள அனுபவம்....

 

விஜய் சார் உடன் நெருக்கமாக பேச ஆரம்பித்தது இந்த பாடலில் இருந்து தான். இந்த பாடலின் ஆடியோ லான்ச் முடிந்தவுடன் ஷங்கர் சார் ஒரு பார்ட்டி வைத்தார். அப்போது விஜய் சார் அங்கு இருந்தார். அவரை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் என நான் போய் பேசவில்லை. நானும் முத்துக்குமாரும் பேசி கொண்டு இருக்கோம். அவரா வந்து பாட்டு நல்லா இருக்குனு சொன்னார். நான் அவருக்கு நிறைய எழுதி இருக்கேன்னு, அவருக்கு நான் எழுதிய பாடல்களைக் குறிப்பிட்டுச் சொன்னார். அப்போது தான் பாடலாசிரியர்களை அவர் கவனிக்கிறார் என்று நான் உணர்ந்த தருணம்.  அதன் பிறகு, அவருடைய வீட்டுக்கு ஒவ்வொரு படத்திற்கும் சென்றுள்ளோம். வேலாயுதம், வேட்டைக்காரன், துப்பாக்கி என ஒவ்வொரு படத்தின் போதும் அவருடைய வீட்டுக்குச் சென்றுள்ளோம். விருந்தோம்பலில் அவருக்கு இணை யாரும் இல்லை. அருமையான சூழலில் அவருடன் நிறைய அனுபவம் உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தம்பி, தங்கைகளே...” - த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
vijay wishes 10 students for public exam

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை (25.03.20240) முதல் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 8 வரை நடைபெறவுள்ள இந்த தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதியும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14ம் தேதியும் வெளியிடப்படுகிறது.  

இந்த நிலையில் மாணவ, மாணவிகள் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர் அவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் அல்லாது திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாத இறுதியில் ராஷ்மிகா மந்தனா மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் நடிகரும் த.வெ.க-வின் தலைவருமாகிய விஜய் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் எக்ஸ் வலைத்தள பதிவில், “தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை,  நாளை எழுதவுள்ள என் அருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என விஜய் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் கடந்த ஆண்டு ஜூன் மாதம், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“எல்லா மலையாளிகளுக்கும்...” - விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ வைரல்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vijay kerala selfie video

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. படப்பிடிப்பிற்காக கடந்த 18 ஆம் தேதி விமானம் மூலம் விஜய் கேரளா சென்ற நிலையில் அவரைக் காண திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். பின்பு விஜய், தனது ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். அவர் வெளியில் செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்து நின்றதால், கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால், விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அறிந்த விஜய், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து அவர்களின் அன்பை பெற்று, அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தினமும் அவர் ரசிகர்களை பார்க்கும் வீடியோவும், அவர் பேசும் வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வகையில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”எல்லா மலையாளிகளுக்கும்” என குறிப்பிட்டு மலையாளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.