தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக் மற்றும் இர்ஃபான் மாலிக் இணைந்து தயாரித்த திரைப்படம் ‘இந்திரா’. அறிமுக இயக்குநர் சபரிஷ் நந்தா இயக்கத்தில் உருவான இப்படத்தில் வசந்த் ரவி மற்றும் மெஹ்ரீன் பிர்சதா இணைந்து நடித்தனர். இந்தப் படத்தில் அனிகா சுரேந்திரன், சுனில், கல்யாண் மாஸ்டர், சுமேஷ் மூர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதில் பாடலாசிரியராக அறிமுகமானவர் தேவ் சூர்யா. இவர் தனது அனுபங்களை பகிர்ந்து கொண்டார்.
பாடலாசிரியாரக அறிமுகமானது குறித்து பேசிய அவர், “எனக்கு தமிழ் மொழி மீது இருந்த விருப்பம் தான் பாடலாசிரியர் ஆகியிருக்கிறேன். என் பாட்டி தமிழ் ஆசிரியை. அதனால் எனக்கு தமிழில் தெரியாத சந்தேகங்களை அவரிடம் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு இருந்தது. என் பாட்டி மூலம் தான் தமிழ் மொழி மீது எனக்கு விருப்பம் வந்தது. இதனால் தான் எனக்கு எழுத வேண்டும் என்ற ஆர்வமும் வந்தது. நான் என் அம்மா, நண்பர்கள் மற்றும் என்னை சுற்றி இருந்தவர்களுக்காக கவிதை எழுத துவங்கினேன்.
என் நண்பர்களின் காதலுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு காதல் கவிதைகள் எழுதி கொடுத்திருக்கிறேன். எழுத்து மூலம் பணமின்றி ஒருவரை மகிழ்ச்சியில் ஆழ்த்த முடியும் என்ற நிலை உருவானது. அதுவே நான் அதிகம் எழுதவும் காரணமாக இருந்தது. பரிசு பொருட்கள் இன்றி எழுத்தின் மூலம் ஒருவரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதை போல் ஒரு சந்தோஷம் இருக்கவே முடியாது’ என்றார்.