/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/240_22.jpg)
இசைஞானி இளையராஜா 35 நாட்களில் எழுதி முடித்த முழு சிம்பொனியை ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் கடந்த 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் அரங்கேற்றினார். இதன் மூலம் ஆசிய கண்டத்தில் சிம்​பொனியை எழு​தி, சர்வதேச அளவில் அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் எனும் வரலாற்றுச் சாதனையைப் படைத்​தார்.
இவரைத் தொடர்ந்து இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் தனது முதல் சிம்பொனி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ’நியூ பிகினிங்க்ஸ்’(New Beginnings) என்ற தலைப்பில் அவர் உருவாக்கியுள்ளதாகவும் உலக இசை தினமான ஜூன் 6ஆம் தேதி அதை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இவர் தனது 14 வயதிலேயே உலகளவில் பிரபலமான ‘The World's Best’ என்ற நிகழ்ச்சியில் தனது திறமையின் மூலம் முதல் பரிசு வென்று உலக அளவில் கவனம் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இளையராஜாவிடம் பயிற்சி பெற்றுள்ளார். அவரிடம் பயிற்சி பெற்ற ஒரே மாணவர் இவர்தான் என்பது நினைவுகூரத்தக்கது.
இந்த நிலையில் லிடியன் நாதஸ்வரம் தனது சிம்பொனி நிகழ்ச்சி தொடர்பாக வெளியிட்ட வீடியோவில், இளையராஜா சிம்பொனியை கேட்க ஆர்வமாக இருப்பதாக சொன்ன அவர், “ராஜா சார் ஸ்டூடியோவுக்கு இசை சம்பந்தமாகப் போகும் போது சிம்பொனி குறித்தும் பேசுவார். மேலும் நீயும் சிம்பொனி பண்ணுவாய் என்றும் ஊக்கமளிப்பார். அவரது ஊக்கத்தின் பெயரில் மட்டும்தான் நான் என்னுடைய முதல் சிம்பொனியை நான்கு வகை உணர்வுகளில் உருவாக்கியுள்ளேன். அவருடைய ஆசீர்வாதத்தால் மட்டும்தான் இது நடந்துள்ளது” என்றார். இதையடுத்து லிடியன் நாதஸ்வரத்தை இளையராஜாதான் சிம்பொனி எழுதச் சொன்னதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் உலா வந்து கொண்டிருந்தது.
இந்த தகவல் குறித்து இளையராஜா தற்போது பேசியுள்ளார். அவர் பேசுகையில், “லிடியன் நாதஸ்வரம் என்னிடம் பாடல் கற்றுக் கொள்ள வந்த இசையமைப்பாளர். ஒரு முறை அவர், தான் ஒரு சிம்பொனியை உருவாக்கியதாக சொன்னார். என்னிடம் ஒப்புதல் பெறுவதற்காகவும் என்னுடைய அங்கீகாரத்திற்காகவும் சிம்பொனியை என்னிடம் வாசித்து காண்பித்தார். அதை 20 நொடிக்கு மேல் கேட்ட போது, நிறுத்த சொல்லிவிட்டு, இது சினிமா பின்னணி இசைப் போல் இருக்கிறது, இது சிம்பொனி கிடையாது. முதலில் சிம்பொனி என்றால் என்ன என்று கற்றுக்கொண்டு பிறகு சிம்பொனி உருவாக்கு என்று சொன்னேன். அவருக்கு நல்ல வழி காட்ட வேண்டும் அல்லவா” என்றுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)