cகெத்து தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த ‘லப்பர் பந்து’ படம் வெளியாகி இன்றுடன் ஒராண்டு ஆகிறது. தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருந்த இப்படத்தில் சஞ்சனா, சுவாசிகா இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன், டி.எஸ்.கே. உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இவரது இசையில் ‘சில்லாஞ்சிருக்கியே’, ‘ஆசை உறவே’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படத்தில் பயன்படுத்தப்பட்ட விஜயகாந்த் - இளையராஜா பாடலான ‘நீ பொட்டு வச்ச தங்க குடம்’ பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் கடந்த ஆண்டு வெளியான படங்களில் வெற்றி பட வரிசையில் டாப் இடத்தில் இடம்பெற்றது.
இந்த நிலையில் ஒராண்டு கடந்த இப்படத்தை முன்னிட்டு படத்தின் இயக்குநரான தமிழரசன் பச்சமுத்து, தனது அடுத்த பட அப்டேட்டையும் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நம்மளால சினிமாவுக்கு போக முடியுமா? போனா ஏடி-ஆக முடியுமா? ஏடி-ஆனாலும் நம்மளால கத பண்ண முடியுமா? பண்ண கதைய நடிகர்கள் கிட்ட சொல்லி ஓகே பண்ண முடியுமா? நடிகர்கள் ஓகே பண்ண கதைய சரியா படமா எடுக்க முடியுமா? எடுத்த படத்த என்னையும் எடிட்டரையும் தவிர மத்தவங்களால முழுசா பார்க்க முடியுமா? இப்டி இன்னும் வெளிய சொல்ல முடியாத நிறைய இன்செக்யூரிட்டிஸ் மற்றும் முடியுமாக்களோட மொத்த உருவமா நான் இருந்தபோது தான் போன வருஷம் இதே செப்டம்பர் 20 லப்பர் பந்து ரிலீஸ் ஆச்சு!
ஃபர்ஸ்ட் ஷோ முடிஞ்ச இந்த நாள் தான் என்னோட எல்லா கேள்விகளுக்கும் நீங்க ஒரே பதிலா சொன்னீங்க..
இங்க முடியாதுன்னு ஒன்னும் இல்ல,எல்லாமே எல்லோரலையும் முடியும்.. மூடிட்டு போய் அடுத்த பட வேலைய பாருன்னு…ரொம்ப நன்றி நீங்க குடுத்த அன்புக்கும் மரியாதைக்கும். இப்டி என்ன மோட்டிவேட் பண்ண இந்த நாளுல ஊருக்கே தெரிஞ்ச அந்த அப்டேட்ட நானும் சொன்னாதான் உங்களுக்கும் அந்த நாளுக்கும் நான் பண்ற நன்றியா இருக்கும்! ஆமாங்க என்னோட அடுத்த படம் தனுஷ் சார் கூட தான் பண்றேன்.
தனுஷ் சார் ரொம்ப நன்றி கத சொல்லும்போது என் பதட்டத்த பொறுத்துக்கிட்டதுக்கு. நடிப்பு அசுரனுக்கு ஆக்ஷன், கட் சொல்ல காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நம்மளால சினிமாவுக்கு போக முடியுமா?? போனா Ad ஆக முடியுமா??Ad ஆனாலும் நம்மளால கத பண்ண முடியுமா??பண்ண கதைய நடிகர்கள் கிட்ட சொல்லி ok பண்ண முடியுமா?? நடிகர்கள் ஓகே பண்ண கதைய சரியா படமா எடுக்க முடியுமா?? எடுத்த படத்த என்னையும் எடிட்டரையும் தவிர மத்தவங்களால முழுசா பார்க்க முடியுமா??… pic.twitter.com/ToEDCx6csf
— Tamizharasan Pachamuthu (@tamizh018) September 20, 2025